Tuesday, October 21, 2014

தமிழக காங்கிரசுக்கு ஜி.கே.வாசனை தலைவராக்க ஆதரவாளர்கள் போர்க்கொடி-பரபரப்பு சுவரொட்டி

Tuesday, October 21, 2014
சென்னை,::பாராளுமன்ற தேர்தல் முடிந்ததுமே தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
 
ஆனால் மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்ததால் கட்சி மேலிடம் அதில் தீவிர கவனம் செலுத்தியது.
 
இப்போது அந்த மாநில தேர்தல்கள் முடிந்து விட்டதால் பல மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் தமிழ்நாடும் அடங்கும். தமிழகத்துக்கு புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்று கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது.
 
தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது. ப.சிதம்பரத்தை தலைவராக்க அவரது ஆதரவாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மூப்பனார் காங்கிரசை விட்டு பிரிந்து த.மா.கா.வை தொடங்கியபோது பெருவாரியான தொண்டர்கள் அவருடன் சென்றனர்.
மூப்பனார் மறைவுக்கு பிறகு ஜி.கே.வாசன் த.மா.கா.வை காங்கிரசுடன் இணைத்தார். எனவே காங்கிரசில் பல கோஷ்டிகள் இருந்தாலும் வாசன் அணியே பலம் வாய்ந்ததாக உள்ளது. இப்போதும் வாசன் ஆதரவாளரான ஞானதேசிகன் தலைவராக இருக்கிறார்.
 
புதிய தலைவரை நியமித்தால் ஜி.கே.வாசனை தலைவராக நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஏற்கனவே ஓரிரு முறை பரபரப்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. வாசன் மீண்டும் த.மா.கா.வை தொடங்குவாரா? என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போது மீண்டும் பரபரப்பான சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் ‘‘தமிழகத்தில் ஐயா’’ என்றால் காங்கிரஸ். காங்கிரஸ் என்றால் மக்கள் தலைவர் ஜி.கே.வாசன்தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
இதில் மாநில பொருளாளர் கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், ஞானசேகரன், கந்தசாமி, வளசரவாக்கம் முன்னாள் சேர்மன் இ.சி.சேகர் ஆகியோர் படங்களும் இடம் பெற்றுள்ளன. இதே போன்ற சுவரொட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment