Saturday, October 18, 2014

நேபாளம்: பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு!

Saturday, October 18, 2014
காத்மாண்டு::நேபாளத்தில் உள்ள இமயமலை பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஏராளமான வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் அங்குள்ள மனாங், முஸ்டாங் மாவட்டங்களில் இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலை பகுதியில் திடீரென பனிப்புயல் வீசியது.
 
இதனால், பனிப்பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் பலியாகினர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த 3 மலையேறும் வீரர்கள் அடங்குவர். இவர்கள் தவிர இஸ்ரேல், கடனா வியட்நாமை சேர்ந்த மலையேறும் வீரர்களும், 11 நேபாள வழிகாட்டிகளும் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது.
 
பனிப்புயல் வீசும் போது இப்பகுதியில் சுமார் 150 பேர் இருந்தனர். இறந்தவர்கள் போக இன்னும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் நேபாள ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டு வந்தனர். 4 ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில்  ஈடுபடுத்தப்பட்டன.
 
நேற்று மட்டும் பனிமலையில் சிக்கித் தவித்த 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், புதிதாக 7 பிரேதங்கள் கிடைத்திருப்பதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தனர். இதனையடுத்து, பனிப்புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது.
காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் ஒரு மீட்டர் அடர்த்தி கொண்ட பனிப்பொழிவு ஏற்பட்டதால் மீட்பு நடவடிக்கைகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், தற்போது, பனி மெல்ல உருகத் தொடங்கியுள்ளதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெறும் என நம்புவதாகவும் மீட்புப் படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment