Monday, October 20, 2014

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறிய வழக்கு: குற்றச்சாட்டு பதிவு 31–ந்தேதிக்கு தள்ளிவைப்பு!

Monday, October 20, 2014
புதுடெல்லி::2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில்
கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியதாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
 
இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. இயக்குனர் சரத்குமார் ரெட்டி உள்பட 19 பேர் மீது ஏற்கனவே டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 9 நிறுவனங்களும் அடங்கும்.
 
குற்றப்பத்திரிகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக டி.பி. குரூப் நிறுவனமானது குசேகான் புரூட்ஸ் – வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி பணம் கைமாறியதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இது உண்மையான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல செல்போன் லைசென்ஸ் பெறுவதற்காக டி.பி.குரூப் கம்பெனிகள் வழங்கிய பணம் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து கோர்ட்டில் பதிவு செய்துள்ளனர். குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை. டி.பி.குரூப்புக்கும் கலைஞர் டி.வி.க்கும் இடையேயான பண பரிமாற்றத்தை வைத்து குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஆர்.ராசா, கனிமொழி தரப்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல்கள் வாதாடினர்.
 
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க கோரும் மனுவை ஏற்கனவே கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. உடல்நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஆஜர் ஆவதில் இருந்து மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இன்று இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக இருந்தது. இன்று காலை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் கூடியது.
 
அப்போது நீதிபதி ஓ.பி. சைனி வழக்கு விசாரணையை வருகிற 31–ந் தேதிக்கு ஒத்திவைத்தார். குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு இன்னும் தயாராகாததால் 31–ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

No comments:

Post a Comment