Monday, October 20, 2014

ரணிலின் நடவடிக்கைகள் புலிகளின் தமிழீழம் என்றொரு நாடு மலர சீக்கிரம் வழியமைத்துக் கொடுத்துவிடும்: விமல் வீரவன்ச!

Monday, October 20, 2014
இலங்கை::எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் புலிகளின் தமிழீழம் ஒன்றுக்கான வழியேற்படுத்துமென்று அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
 
தேசிய சுதந்திர முன்னணியின் பத்தரமுல்லை தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது அண்டர் த ரேடார் ஆபரேசன் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் அர்த்தம் ரேடார் திரையில் அகப்படாத விமானம் போன்று அடுத்தவர் கண்ணுக்குப் புலப்படாமல் செயலாற்றுவது என்பதாகும்.
 
புலிகளின் விமானங்கள் இவ்வாறு தான் ரேடாரில் சிக்காமல் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றன. அதே போன்று தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் போன்ற நடவடிக்கைகளில் ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளும் மறைவான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
 
ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயம்  புலிகள் மீதான தடையை நீக்க உதவியது. விரைவில் அவர் மலேசியாவில் நடைபெற உள்ள மாநாடொன்றில் கலந்துகொள்ளவுள்ளார். அது தமிழீழத்திற்கே வழி செய்யும் மாநாடாக அமையப் போகின்றது.

ஏனெனில் தற்போது  புலிகளும் அவர்களது ஆதரவு சக்திகளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கின்றார்கள். அதற்கான காரணம் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ரணில் கொடுத்திருக்கும் உத்தரவாதம் தான். அதுமட்டுமன்றி தான் வெற்றிபெற்றால் பத்தே நாட்களில் வடக்கிலிருந்து ஒட்டுமொத்த ராணுவத்தையும் வாபஸ் பெறுவதாகவும் ரணில் உறுதியளித்துள்ளார்.
 
ரணிலின் இவ்வாறான நடவடிக்கைகள் புலிகளின் தமிழீழம் என்றொரு நாடு மலர சீக்கிரம் வழியமைத்துக் கொடுத்துவிடும். ஜனாதிபதி பெற்றுத் தந்த நாட்டின் சுதந்திரம் மீண்டும் பறிபோகும். எனவே பொதுமக்கள் இவ்வாறான சதிகளுக்கு துணைபோகக் கூடாது என்றும் விமல் வீரவனச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment