Wednesday, October 1, 2014

20 மீனவர்கள், 75 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்!

Wednesday, 01, October, 2014
சென்னை::இலங்கை கடற்படை சிறைப்பிடித்த 20 மீனவர்கள் மற்றும் 75 படகுகள் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–
 
எங்களது தலைவி ஜெயலலிதாவின் ஓயாது இடைவிடா முயற்சியின் காரணமாக இலங்கை சிறையில் இருந்த 76 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. அவர்களில் 72 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
 
ஆனால் அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை. தங்களது சீரிய தலைமையின் கீழ் இயங்கும் மத்திய அரசின் உதவியால் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 71 மீன்பிடி படகுகளை இலங்கை அரசு இன்னும் விடுவிக்கவில்லை. அவை மழையின் காரணமாக உபயோகமற்றதாகி விடும். எனவே மேலும் சேதமடைந்து பழுதடைவதை தடுக்க விரைவில் தொடங்க இருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே அவற்றை விடுவிக்க வேண்டும்.
 
கடந்த மாதம் 27–ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் பயணம் செய்த படகு தொழில் நுட்ப கோளாறு காரணமாக காற்று மற்றும் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர். 28–ந்தேதி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படை காங்கேசன் துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 29–ந்தேதி கய்ட்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களை வருகிற 10–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர் என்ற மற்றொரு தகவலையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கடந்த 29–ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் இருந்து 4 படகுகளில் 16 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 30–ந்தேதி அதிகாலையில் இவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றது.
 
தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்க பாரம்பரிய உரிமைகள் இருந்தும் இலங்கை கடற்படையினரால் அவர்களுக்கு தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
 
கடந்த 1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தப்படி சட்ட விரோதமாக கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை எதிர்த்தும், மீனவர்களின் சர்வதேச கடல் எல்லை வரையறை குறித்தும் தமிழக அரசு சார்பிலும், எங்களது அன்பு தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலை நாட்ட 1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் இந்தியா– இலங்கை இடையேயான சட்ட விரோதமான ஒப்பந் தங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதில், தமிழ்நாடு அரசு மிகவும் உறுதியுடன் உள்ளது.
 
இந்தியா–இலங்கை இடையேயான கச்சத்தீவை திரும்ப மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலை நாட்டுதல், மீன் பிடிக்கும் பிரச்சினைகளுக்கு தங்களின் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
 
எனவே இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 20 தமிழக மீனவர்களையும், 75 படகுகளையும் விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment