Thursday, October 2, 2014

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு எதிரான வருமானவரி வழக்கு 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

Thursday, October 02, 2014
சென்னை:தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் 1992-93 மற்றும் 1993-94 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அவர்கள் மீது வருமான வரித்துறை உதவி ஆணையாளர், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தட்சணாமூர்த்தி, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராகும்படி கடந்த மாதம் 18-ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சார்பில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி.கே.வாசுகி, ‘ஜெயலலிதா, சசிகலா 6 வாரங்களுக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும், அந்த உத்தரவில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் அபராதத்துடன் அனைத்து கட்டணமும் செலுத்த தயாராக உள்ளதாக வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலிடம் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி சமரச மனுக்களை கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை 6 வாரங்களுக்குள் வருமான வரித்துறை பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தரப்பு வக்கீல்கள், வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ராமசாமி, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளிவைக்காமல், விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கை பிற்பகலுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ‘சென்னை ஐகோர்ட்டு, ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு அளித்துள்ளது. அவர்கள் நேரில் ஆஜரானால்தான் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியும். அவர்கள் இல்லாமல், இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.
 

No comments:

Post a Comment