Sunday, October 19, 2014

பூந்தமல்லியில் வீட்டில் பதுக்கிய ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த போதை கடத்தல் கும்பல் கைது!

Sunday, October 19, 2014
பூந்தமல்லி::பூந்தமல்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார், போதை கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை கடந்த 6 மாதத்துக்கு முன்பு டெல்லியில் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு மும்பை, ஐதரபாத், டெல்லி ஆகிய நகரங்களுக்கு ஹெராயின் போதை பொருள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் போதை கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக சென்னையில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். சென்னை போலீசார் உதவியுடன் டெல்லி போலீசார் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த ரவி என்பவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில், போதை கடத்தல் கும்பல் பற்றி தகவல்கள் தெரியவந்தது.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மயிலேறும்பெருமாள் (24) என்பவருக்கு பூந்தமல்லி மல்லீஸ்வர நரசிம்மநகர் என்ற பகுதியில் ரவி வாடகை வீடு எடுத்து கொடுத்துள்ளார். பெருமாளின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், இலங்கை சேர்ந்தவர்கள் பெருமாளின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் மற்றும் சென்னை போலீசாரும் இணைந்து பெருமாளின் வீட்டை சுற்றி வளைத்து உள்ளே சென்று சல்லடை போட்டு தீவிர சோதனை செய்தனர்.
 
சோதனையில் வீட்டில் இருந்த 2 சூட்கேசில் மர்ம பார்சல்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை பரிசோதித்த போது ஹெராயின் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 18 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மயிலேறும்பெருமாள், இலங்கை சேர்ந்த டோபிக்(40), ராபிக் (61), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ராபிக், டோபிக் இருவரும் தந்தை, மகன் என்பது குறிப்பிடதக்கது. கைது செய்யப்பட்டவர்களுக்கும், பாகிஸ்தாஸ் உளவாளிகளான அருண் செல்வராசன், சிவபாலன், ஜாகீர் உசேன் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற பல்வேறு கோணத்தில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரும், மத்திய அரசின் இன்டலிஜன்ஸ் பீரோ (ஜ.பி) போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
 
மாணவர்களுக்கு குறி பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் 20 பொறியியல் கல்லூரிகள், 3 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை கும்பல்கள் தங்கள் கைவரிசையை காட்டி வந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment