Sunday, October 19, 2014

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை: ஜெ.சிறையில் இருந்த போது இறந்த 193 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி!

Sunday, October 19, 2014
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்த போது இறந்த 193 பேரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
 
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை நான் சந்தித்து வந்திருக்கிறேன். அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறேன். அதிமுக தொண்டர்களின் அன்பும், தமிழக மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கும் வரையில் எதைக் கண்டும் நான் அஞ்சப் போவதில்லை. எனக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையைப் பார்த்து உள்ளம் வெதும்பி, நான் சந்திக்கும் துயரங்களைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல், என் மீது அன்பு கொண்டுள்ள தாய்மார்கள், பொதுமக்கள், கட்சியினர் குறிப்பாக மாணவச் செல்வங்கள் என மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
 
மேலும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர செய்திகளை கேட்டு வேதனை அடைகிறேன்.மரணமடைந்த 193 பேர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மரணமடைந்தோர்களது குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் தலா ரூ.3 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும். அதேபோல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தன்னையே மாய்த்துக் கொள்ளும் இத்தகைய செயல்களில் இனி யாரும் ஈடுபடக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment