Thursday, July 31, 2014

மணல் கொள்ளை, இலங்கை பிரச்னை பற்றி பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Thursday, July, 31, 2014
சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை படித்தார். இதன்பின், தேமுதிக, மார்க்சிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ், பாமக, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் சில சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச அனுமதி கோரினர். இதற்கு சபாநாயகர்  தனபால், ‘‘எல்லோரும் இன்று ஒரு முடிவுடதான் வந்துள்ளீர்கள். இன்று காலைதான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொடுத்தீர்கள். அவற்றுக்கு அந்தந்த துறையில்  இருந்து பதில் கி¬டைத்ததும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்றார். இதன்பிறகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரச்னைகளை பற்றி பேச அனுமதிக்க வேண்டும்  என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து இரண்டு  கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி  உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தேமுதிக உறுப்பினர்கள் சட்டசபையில் அமர்ந்திருந்தனர்.

சட்டசபைக்கு வெளியே உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணசாமி (பு.த.):  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைசேர்ந்த ஓய்வுப்பெற்ற நீதிபதி அசோக்குமார்,  தினகரன், கேஜி.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் நீதிபதி கட்ஜூ தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார். பிரஸ் கவுன்சிலில் இருந்துகொண்டு  தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் கட்ஜூவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள அந்நாட்டு ராணுவ  கருத்தரங்கில் இந்திய அதிகாரிகள் கலந்து கொள்ளக் கூடாது ஆகியவை பேச அனுமதி கேட்டேன். சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் வெளிநடப்பு செய்தேன்.

சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்): தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. இதுபற்றி மானிய கோரிக்கை மீது பேசும்போது முறையாக பதில்  தெரிவிக்கவில்லை. மணல் கொள்ளை குறித்து கருத்து சொன்ன மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், கடந்த ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லை  என்றார். இதனால் அவர் மீது முதல்வர் வழக்கு தொடுத்துள்ளார். மணல் கொள்ளை பற்றி வெளியேயும் பேச முடியவில்லை. உள்ளேயும் பேச முடியவில்லை. இதுபற்றி  விவாதிக்க அனுமதி மறுத்ததால் வெளி நடப்பு செய்தோம்.

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்):மணல் கடத்தலை தடுக்க சென்ற ஏட்டு, டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். மணல் கடத்தல் தடுக்க செல்லும் அதிகாரிகளுக்கும்  கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாருக்கு பாதுகாப்பு  இல்லை. மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் சொல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த காரணத்தால் சட்டசபையில் இருந்து வெளியேறினோம்.பாமக கணேசன்: விழுப்புரம் மாவட்டம் மேலச்சேரி பச்சையம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடைபெற உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியை வனத்துறையினர்  அடைத்துவிட்டனர். இது பற்றி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment