Thursday, June 05, 2014
இலங்கை::இலங்கையில் தமிழர் பகுதிகள் உள்பட எந்தவொரு மாகாணத்துக்கும் போலீஸ் அதிகார பகிர்வு சாத்தியமில்லை என மோடியிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.டெல்லியில் கடந்த மாதம் 26ம் தேதி நடந்த பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மறுநாள் சார்க் தலைவர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல், காஷ்மீர் பிரச்னை குறித்து நவாஸ் ஷெரீப்புடன் மோடி விவாதித்தார். அதே போல, இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்நிலையில், மோடி&ராஜபக்சே சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரம சிங்கே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிசிஸ் கூறியதாவது:
இருதரப்பு பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரச்னைகள் இடம்பெற்றன. சார்க் நாடுகளின் எதிர்காலம் குறித்த மோடியின் பார்வை, பொருளாதாரத்தை விரிவடைய செய்வது, மீனவர்கள் பிரச்னை ஆகியவை முக்கிய அம்சங்களாக இருந்தது. பேச்சுவார்த்தையின் போது நமது அரசியலமைப்பு விவகாரங்களில் நமது நிலையை எடுத்துரைத்தோம். இலங்கையில் கடந்த 1987ம் ஆண்டு 13வது சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 5 அரசுகள் வந்துள்ளன. ஆனால் அதை முழுமையாக அமல்படுத்த முடியும் என எந்த அரசும் கருதவில்லை. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் உள்பட எந்த மாகாணத்துக்கும் போலீஸ் அதிகார பகிர்வு சாத்தியமில்லை என்பதும் இந்திய தரப்பிடம் வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு பெரிசிஸ் கூறினார்.

No comments:
Post a Comment