Thursday, June 5, 2014

வரும் செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி ஒபாமாவுடன் முக்கிய சந்திப்பு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

புதுடெல்லி::இந்த ஆண்டு செப்டம்பர் கடைசி வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு செல்கிறார். வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ மட்டுமே 282 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திரமோடி கடந்த மாத இறுதியில் பொறுப்பேற்று கொண்டார். உலக தலைவர்கள் பலரும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் முதல் முறையாக நரேந்திரமோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஏற்கனவே, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, 2002ம் ஆண்டில் அம்மாநிலத்தில் கலவரம் நடந்தது.

அப்போது சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளை மோடி தடுக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த காரணத்தால், கடந்த 2005ம் ஆண்டில் மோடிக்கு அமெரிக்க அரசு விசா தர மறுத்தது. அதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாகியும் விசா மறுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த ஆண்டில் பாஜ பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். பாஜ கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தல் கணிப்புகளும் வெளியாகின. இதனால், இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி வருவது உறுதி என தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல், அகமதாபாத் சென்று மோடியை சந்தித்து பேசினார். இது பெரிய திருப்பமாக அமைந்தது.

இதன்பின்பு, தேர்தலில் வென்று பிரதமராக மோடி பதவியேற்றதும் அமெரிக்க அதிபர் ஒபாமா போனில் மோடியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமெரிக்கா வருமாறு நரேந்திரமோடிக்கு ஒபாமா அழைப்பு விடுத்தார். அதனை மோடி ஏற்றுக் கொண்டார். உலகின் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடியும் சந்திக்கும் தினத்தை உலகமே மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறது. இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் வாஷிங்டனில் நரேந்திரமோடி பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அதே மாதத்தில், நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொது சபையிலும் மோடி பேச இருக்கிறார். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் இல்லாமல், வாஷிங்டனில் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து பேச இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய நாடுகள் சபையில் மோடி பேசுவதை விட ஒபாமாவுடன் பேசுவதே அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment