Friday, June 27, 2014

புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டிருந்தால்,அல்லது உதவி செய்திருந்து நாட்டைவிட்டு தப்பித்துச் சென்றிருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: புலிகளுடன் தொடர்புபட்ட 110 பேர் இதுவரை கைது: அஜித் ரோஹண!

Friday, June 27, 2014
இலங்கை:: புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டிருந்தால்,அல்லது எவ்வகையிலாவது உதவி செய்திருந்து நாட்டைவிட்டு தப்பித்துச் சென்றிருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னரான ஒற்றுமையை குழப்பி மறுபடியும் அதனை சீரழிக்க முயற்சி செய்பவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதுடன் இதுவரை அவ்வாறான 110 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

மார்ச் மாதம் பளைப் பகுதியில் இடம்பெற்ற கைதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 51 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதற்கு முன்பும் இடம்பெற்ற சந்தேகநபர்கள் கைதுகளின் அடிப்படையில் இதுவரை 110 பேர் கைதாகியுள்ளனர்.

இம்மாதம் 17 ஆம் திகதி ஹொரணை ரைகம பகுதியில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பில் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த சுப்பிரமணியம் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இந்நபர் 2002 இல்  புலிகள் அமைப்பில் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்தும் தலைமறைவாகி இருந்துள்ள இந்நபரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் றைகம பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். அத்துடன் குறித்த நபர் இவ்வருடம் அப்பகுதி கிராம சேவகருக்கு 500 ரூபா இலஞ்சம் கொடுத்து ரைகம பகுதியில் வசிப்பதாக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது. இதற்கமைய ஓய்வுபெற்றுள்ள குறித்த கிராம சேவகரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அதேபோல கடந்த 19 ஆம் திகதி புலிகள் அமைப்பில் கடற்புலியாகவிருந்த திருநாவுக்கரசு என்ற நபரும் கட்டுநாயக்காவில் இருந்து கட்டார் நோக்கி புறப்பட்டுச் செல்ல தயார் நிலையில் இருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நபரும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவராவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment