Friday, June 27, 2014

இலங்கை விடுதலை செய்த தமிழக மீனவர்கள் 29 பேர் இன்று ஊர் திரும்புகின்றனர்!

Friday, June 27, 2014
நாகை::இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலையான புதுகை மீனவர்கள் 24 பேர் நேற்று மாலை காரைக்கால் வந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர், நாகை மீனவர்கள் 7 பேர் என 29 பேர் இன்று மாலை மண்டபம் வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ம் தேதி 8 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 24 மீனவர்களையும், ராமேஸ்வரத்திலிருந்து 3 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

இதேபோல் கடந்த 19ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை சிறைபிடித்துச் சென்றது.கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தமிழக மீனவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசும் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்பயனாக 18ம் தேதி கைது செய்யப்பட்ட புதுகை மீனவர்கள் 24 பேரையும், ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரையும் நேற்று முன்தினம் இலங்கை அரசு விடுதலை செய்தது. இதில் புதுகை மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று இந்திய எல்லையில் காரைக்கால் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவல்படை கமாண்டர் உதல்சிங் தலைமையில் நேற்று மாலை காரைக்கால் மார்க் தனியார் கப்பல் துறைமுகத்திற்கு மீனவர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் நாகை மற்றும் புதுக்கோட்டை மீன்வளத்துறை அதிகாரிகள் சுப்புராஜ், மோகன்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் மீன்வளத்துறை ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் ஊர் திரும்ப இருந்த நிலையில், 19ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை விடுதலை செய்தது. இதையடுத்து திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரும், நாகை மீனவர்கள் 7 பேரும் என 29 மீனவர்களை இன்று இந்திய கடலோர காவல் படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கின்றனர். அவர்கள் இன்று மாலை அல்லது இரவுக்குள் மண்டபம் துறைமுகம் வந்து சேர உள்ளனர்.

No comments:

Post a Comment