Thursday, April 24, 2014

ம.பி., உ.பி.யில் பரபரப்பு வாக்கு பதிவு சுஷ்மா சுவராஜ், ஹேமமாலினி தேறுவார்களா?!

Thursday, April 24, 2014
புதுடெல்லி::இன்று நடக்கும் 6வது கட்ட தேர்தலில், எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், நடிகை ஹேமமாலினி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் உள்பட பல முக்கிய பிரமுகர்களின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.நாடாளுமன்ற தேர்தலில் 6வது கட்டமாக இன்று 11 மாநிலங்களை சேர்ந்த 117 தொகுதிகளில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடக்கும் வாக்கு பதிவில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், நடிகை ஹேமமாலினி, மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகன், பிரணாப் முகர்ஜியின் மகன் உள்பட பல முக்கிய பிரபலங்களின் தலைவிதியை மக்கள் நிர்ணயிக்க உள்ளனர்.  மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் இன்று வாக்கு பதிவு நடக்கிறது. இங்கு மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் திக்விஜய் சிங்கின் இளைய சகோதரர் லட்சுமண் சிங் போட்டியிடுகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜ. சார்பாக இந்தி நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகனும் ராஷ்டிரிய லோக் தள் வேட்பாளருமான ஜயந்த் சவுத்ரி போட்டியிடுகிறார்.*மகாராஷ்டிர மாநிலம் மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஆம் ஆத்மியின் மீரா சன்யால் போட்டியிடுகிறார்.மும்பை வடக்கு மத்திய தொகுதியில் முன்னாள் பா.ஜ. தலைவர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் பா.ஜ. சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் மறைந்த நடிகர் சுனில் தத்தின் மகளும் தற்போதைய எம்.பி.யுமான பிரியா தத் போட்டியிடுகிறார்.மும்பை வடமேற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் குருதாஸ் காமத் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் மாயாங் காந்தியும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி சார்பில் படத் தயாரிப்பாளர் மகேஷ் மஞ்ச்ரேக்கரும், பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தும் போட்டியிடுகின்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தில் தவுசா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் நமோ நாராயண் மீனாவும் பா.ஜ. சார்பில் முன்னாள் போலீஸ் துறை தலைவர் ஹரீஷ் மீனாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆல்வார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் 2வது முறையாகபோட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, யோகா குரு ராம்தேவின் சீடர் மகந்த் சந்த்நாத் பா.ஜ. சார்பில் போட்டியிடுகிறார்.

மேற்குவங்க மாநிலத்தில் ராய்கஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பபித்ரா ரஞ்சன் தாஸ் முன்ஷியும் அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி தீபா தாஸ் முன்ஷியும் போட்டியிடுகின்றனர். ஜாங்கிபூர் தொகுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.ஜார்கண்ட் தும்கூர் தொகுதியில் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா சார்பில் பாபுலால் மராண்டியும், கவுகாத்தி தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் சிபுசோரனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் முன்னாள் மாநில முதல்வர்கள். இவருக்கு எதிராக பா.ஜ. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பிஜோயா சக்ரவர்த்தியும், அசாம் கண பரிஷத் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பீரேந்திர பிரசாத் பைஸ்சியாவும் போட்டியிடுகின்றனர். இவர்களின் தலையெழுத்தை வாக்காளர்கள் இன்று நிர்ணயிக்கின்றனர்.

No comments:

Post a Comment