Thursday, April 24, 2014

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குபதிவு!

Thursday, April 24, 2014
சென்னை::தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் இன்று அதிகாலை 7 மணி முதல் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 350 இடங்களில் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குபதிவு பாதிக்கப்பட்டது. எனினும், காலை 11 மணிக்கே 35.28 சதவீதம் பதிவாகியது. மக்களவை தேர்தலில் 6வது கட்டமாக இன்று 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும். தமிழகத்தில் 60,817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17,687 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் வாக்குப் பதிவு செய்யப்படுகின்றன. துணை ராணுவத்தினர், அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் என ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 3 தொகுதிகளிலும் சேர்த்து 37 லட்சத்து 75,380 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த முறை அதிகபட்சமாக தென்சென்னை தொகுதியில்தான் 42 வேட்பாளர்கள் உள்ளனர். இதற்கு அடுத்து வடசென்னையில் 40 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த 2 தொகுதிகளிலும் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மத்திய சென்னையில் 20 வேட்பாளர்கள் உள்ளதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.சென்னையில் வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே பெண்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். குறிப்பாக திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆயிரம்விளக்கு, ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் அதிகமாக ஆர்வமாக வந்து வாக்களித்தனர். சென்னை புறநகர் பகுதியிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் காலை 6.30 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்தனர். மாநிலம் முழுவதும் காலை 7 மணி முதல் 11 மணி வரை 35.28 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தென்சென்னையில் 26 சதவீதமும், மத்திய சென்னையில் 25 சதவீதமும், வடசென்னையில் 27 சதவீதமும், ஆலந்தூர் இடைத்தேர்தலில் 28 சதவீதமும் பதிவாகியிருந்தன.சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடு துறை உள்பட பல ஊர்களில் வாக்குபதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. காலை 10 மணியளவில் சுமார் 350 இடங்களில் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு, சரி செய்யப்பட்டது. இதன் காரணமாக, சில இடங்களில் ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. சென்னை கோபாலபுரம் சாரதா வித்யாலயா பள்ளியில் வாக்குபதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் மிஷின் ரிப்பேர் ஆனது. இந்த பள்ளியில் திமுக தலைவர் கருணாநிதி ஓட்டு போட வருவார் என்பதால், உடனடியாக சரி செய்யப்பட்டு, 15 நிமிட தாமதத்துக்குப் பிறகு மீண்டும் வாக்குபதிவு தொடங்கியது.

அதேபோல, கணபதி பள்ளியில் மிஷின் ரிப்பேர் ஆனதால் 30 நிமிடம் தாமதமானது. முதல்வர் ஜெயலலிதா வாக்களித்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியிலும் இதேபோல 25 நிமிடம் தாமதமாக வாக்குபதிவு நடைபெற்றது.முதல்வர் ஜெயலலிதா காலை 9.10 மணிக்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்தார். அவர் வரும்போது பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். முதல்வர் வந்ததும் வாக்குபதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின், அவர் நேராக சென்று வாக்களித்தார்.திமுக தலைவர் கருணாநிதி கோப£லபுரம் சாரதா வித்யாலயா பள்ளியில் காலை 11 மணிக்கு வாக்களித்தார். அதே வாக்குச்சாவடியில் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மு.க.தமிழரசு, அவரது மனைவி மோகனாவுடன் வந்து வாக்களித்தார்.

ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரிக்கு காலை சரியாக 7.10 மணிக்கே வந்து நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.  அதேபோல, சாலிகிராமத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் விஜயகாந்த் காலை 11.30 மணிக்கு தனது மனைவி பிரேமலதாவுடன் வந்து வாக்களித்தார்.தலைமைச் செயலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்து, அனைத்து தொகுதிகளின் வாக்குபதிவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மற்றும் செல்போன் மூலம் கட்டுப்பாட்டு அறையில் புகார் பெறப்பட்டன. அந்த புகார்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது பறக்கும்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.

 கட்டுப்பாட்டு அறையில் 3 தொகுதிக்கு ஒரு வருவாய் துறை அதிகாரி வீதம், 16 மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் பூத் கைப்பற்றுதல், மிஷின் வேலை செய்யாதது உள்ளிட்ட பிரச்னை குறித்து கேட்டறிந்தனர். மாநிலத்தில், பதற்றமான மற்றும் அதிக பதற்றமானவை பூத்கள் உள்பட முக்கிய பூத்களை, நேரடியாக கண்காணிப்பு செய்யப்பட்டுகிறது. தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெறுகிறது. மிஷின்கள் ரிப்பேர் ஆன பூத்களில் வாக்குபதிவு நேரத்தை கூட்ட மாட்டோம். 6 மணி வரை வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து அவர்கள் மட்டுமே ஓட்டு  போட அனுமதிக்கப்படுவார்கள்’ என்றார்.

No comments:

Post a Comment