Thursday, April 24, 2014

வாரணாசியில் இன்று நரேந்திர மோடி மனு தாக்கல் முன்னாள் நீதிபதி, படகோட்டி முன்மொழிந்தனர்!

Thursday, April 24, 2014
வாரணாசி::வாரணாசியில் பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை முன்னாள் நீதிபதி, படகோட்டி, நெசவாளி ஆகியோர் முன்மொழிந்தனர்.பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குஜராத்தில் வதோதரா, உத்தரபிரதேசத்தில் வாரணாசி(காசி) ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வதோதராவில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். இந்நிலையில், வாரணாசி தொகுதியில் மனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை 11 மணியளவில் வாரணாசிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு வந்த நரேந்திர மோடி, அங்கிருந்த மதன்மோகன் மாளவியாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், திறந்த ஜீப்பில் அவர் ஊர்வலமாக புறப்பட்டார். அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பாஜ கொடியுடன் வந்தனர். அவர்கள் மோடி மீது மலர்களை தூவி ஆரவாரம் செய்தனர்.

 ஊர்வலத்தின் வழியில் இருந்த சர்தார் வல்லபபாய் படேல், சுவாமி விவேகானந்தர், அம்பேத்கர் ஆகியோரின் உருவச்சிலைகளுக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை மதன்மோகன் மாளவியாவின் பேரனும் முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியுமான கிரிதர் மாளவியா, பத்மவிபூஷண் விருது பெற்ற கர்நாடக இசை கலைஞர் சந்துலால் மிஸ்ரா, வீர்பத்ர நிஷாத் என்ற படகோட்டி, அசோக் என்ற நெசவாளர் ஆகியோர் முன்மொழிந்தனர்.அடுத்த மாதம் 12ம் தேதி வாக்கு பதிவு நடைபெறும் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் கட்சி சார்பாக அஜய் ராயும் போட்டியிடுகின்றனர். பகுஜன்சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டை காப்பாற்ற கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் நரேந்திர மோடி பிரசாரம்!

புதுடெல்லி::காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மோசமான ஆட்சியால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவை காப்பாற்ற கடவுள் தன்னை தேர்ந்தெடுத்திருப்பதாக பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார உரை நேற்று நாடு முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பப்பட்டது. பிரசாரத்தில் மோடி பேசியதாவது:கடினமான காரியங்களை மேற்கொள்ள குறிப்பிட்ட நபர்களை கடவுள் தேர்ந்தெடுப்பார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மோசமான ஆட்சியால் பெரும் குழப்பத்தில் உள்ள இந்தியாவை காப்பாற்ற கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார். உங்கள் ஆசிர்வாதம் எனக்கு தேவை. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 232 தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தல்கள் அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்பதை முடிவு செய்து விட்டன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிந்து போன விஷயம். அது பெரும் தோல்வி அடைவது உறுதி.

வரவிருக்கும் தேர்தல்களில் நிலையான அரசுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் குறிப்பாக யாருக்கு வாக்களிக்கலாம் என குழப்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நிலையான ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும். நிலையான அரசால் மட்டுமே நல்ல வளர்ச்சியை தர முடியும். பாஜவுக்கு 300க்கும் அதிகமான இடங்கள் கிடைப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியை காப்பாற்றி கொள்வதிலேயே அதிக அக்கறை செலுத்தியது. இத்தகைய அரசு எப்படி நாட்டுக்காக உழைக்க முடியும். அடுத்த நூற்றாண்டுக்கான அடித்தளத்தை உருவாக்க பாஜவுக்கு வாய்ப்பளியுங்கள். இவ்வாறு மோடி பேசினார்.

No comments:

Post a Comment