Thursday, April 3, 2014

தனித் தமிழீழத்தினை உருவாக்கும் நோக்கத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணைகளை கோருகின்றது: மொஹமட் முஸம்மில்!

விசாரணைகளை கோருகின்றது . பிரிவினையினைத் தூண்டி இலங்கைக்கு எதிராக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபைத் தலைவர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார் .
 
இலங்கையில் சர்வதேச விசாரணைகள் தேவையுமில்லை ; அதற்கு ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார் . ஐ.நா. விசாரணைக் குழுவினர் இலங்கை மீதான விசாரணைகளை நடத்துவது தொடர்பில்
 
அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது சுயநல நோக்கத்திற்காகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது . இலங்கையில் முப்பது வருட கால யுத்தம் ஏற்படவும் அதன்மூலம் இலங்கை பாரிய பின்னடைவினை சந்திக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப்புலி இயக்கமுமே இன்று மீண்டும் இலங்கையில் ஆயுத யுத்தமொன்றினை உருவாக்கி தனித் தமிழ் ஈழத்தினை உருவாக்கும் நோக்கத்திற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணை கோரி நிற்கின்றது .
 
மேலும் இலங்கைக்கு எதிராக பிரிவினையை தூண்டும் புலி அமைப்புகள் 16 இனை அரசாங்கம் தடை செய்துள்ளதைப் போல் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் . கூட்டமைப்பை தடை செய்தால் மட்டுமே நாட்டின் தமிழ் சிங்கள மக்களிடையே உருவாகியுள்ள பிரிவினை வாதத்தினை தடுக்க முடியும் .
 
மேலும் இலங்கையில் ஒருபோதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை . இலங்கையில் யுத்த கால கட்டத்தில் இழப்புகள் இடம்பெற்றமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அரசாங்கத்தின் பக்கம் இடம்பெற்ற இழப்புக்களுக்கும் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள முஸ்லிம் மற்றும் பெருமளவிலான தமிழ் மக்கள் தொடர்பிலும் தீர்வு எட்டப்பட வேண்டும் . இல்லையேல் சர்வதேசத்தின் தீர்வு பக்கசார்பானதாகவே அமையும் .
 
உண்மையில் இதுவரையில் சர்வதேச அமைப்புகளின் செயற்பாடுகள் அனைத்தும் ஒருபக்க சார்பானதாகவே அமைந்துள்ளது . அதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் விடுதலைப்புலி அமைப்புகளுக்கும் சார்பான வகையில் ஜெனீவா தீர்மானம் அமையப் பெற்றுள்ளது . அதேபோல் பிரித்தானிய அமெரிக்கா நாடுகள் ஏனைய நாடுகளுக்கு செய்த உரிமை மீறல்கள் தொடர்பில் ஏன் எந்தவொரு அமைப்பும் விசாரணைகள் நடத்தவில்லை . ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினருக்கோ அல்லது அமைப்புகளுக்கோ அமெரிக்கா மீது விசாரணை செய்வதற்கான தைரியம் இல்லை என்பதே உண்மை . இலங்கை பரப்பில் சிறிய நாடாக இருந்தாலும் பலத்தால் மக்களின் ஒற்றுமையிலும் பெரிய நாடு . இங்கு அரசாங்கத்தையோ மக்களையோ மீறி எவராலும் விசாரணை மேற்கொள்ளவோ நாட்டினை பிரித்து குழப்பத்தினை உருவாக்கவோ ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் .
 
அதேபோல் நாட்டில் பிரிவினை வாதத்தை தூண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசையை நிறைவேற்றும் ஐ.நா. விசாரணைகளை ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார் .

No comments:

Post a Comment