Friday, April 04, 2014
சென்னை::ஜனநாயக வழிமுறைகளை மீறி வேட்பாளர் செலவுக்கணக்கு
குறித்து தேவையற்ற கெடுபிடிகளைக் கையாளும் தேர்தல் ஆணையம் மீது அதிமுக
சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்றுஅதிமுக பொதுச்செயலாளரும்,
முதலமைச்சருமான ஜெயலலிதா கூறியுள்ளார். .
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 24.4.2014 அன்று நடைபெற உள்ளதை
முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் `கருப்பட்டி பாளையம் பிரிவு, கிரீன்
பார்க் பள்ளி அருகில், நாமக்கல்' என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை
ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:_நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியைச்
சேர்ந்த, எனதருமை வாக்காளப் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பு
கலந்த வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.எல்லா விதத்திலும்
சாமானிய மக்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் சில
மாதங்களுக்கு முன்பு வரை அங்கம் வகித்து ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க.
என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழ் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும்
வகையில் 2 லட்சம் கோடி பொய் அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை
முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க.
எனக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்
பெருகி வரும் மக்கள் ஆதரவை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத
எதிர்க்கட்சிகள், விரக்தி அடைந்த எதிர்க்கட்சியினர், குறிப்பாக தி.மு.க.
தோல்வி பயத்தில் ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர் எனப் பொய்யான தகவல்களை
கூறி வருகிறார்கள். எனது கூட்டத்திற்கு திரளும் மக்கள் வெள்ளத்தைப்
பார்த்து, எதிர்க்கட்சியினர் மிரட்சி அடைவதும், விரக்தி அடைவதும் இயல்பானது
தான். ஆனால், தேர்தல் ஆணையமும் இதற்கு கட்டுப்பாடு விதிக்க முயல்வது
விந்தையாக உள்ளது. அதாவது, கட்சியின் தலைவர் அல்லது நட்சத்திரப் பேச்சாளர்
பேசும் கூட்டத்தின் மேடையில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது பெயரோ
புகைப்படமோ இருந்தாலும், அவரது பெயரை உச்சரித்தாலும், கூட்டத்திற்கு
ஏற்பட்டதாக கருதப்படும் செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்
என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றது. பொதுமக்கள் தாங்களாகவே
தங்களது சொந்த செலவில் வாகனங்களில் வந்தாலும், அந்தச் செலவு வேட்பாளர்
கணக்கில் சேர்க்கப்படும் என்பது எப்படி நியாயமாகும்?
ஒரு மக்களவைத் தொகுதி என்பது கிட்டத்தட்ட ஒரு மாவட்டத்திற்கு இணையானது.
நான் ஒரு மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் அந்த
மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் என்னைப் பார்க்க வேண்டும், என்னுடைய
உரையினை கேட்க வேண்டும் என்று நான் பேசும் இடத்திற்கு தங்களுடைய சொந்தச்
செலவில் பொதுமக்கள் வாகனங்களில் வருவது என்பது இயற்கையானது தான். இதே
போன்று, அரசியல் தலைவர்களின் பதாகைகளை வைப்பதும், கட்அவுட்களை வைப்பதும்,
வழக்கமான அரசியல் கலாச்சாரம் தான். இது தான் காலம் காலமாக நடந்து வருவது.
1952_ஆம் ஆண்டிலிருந்து பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதே நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டது.
கடந்த 32 ஆண்டுகளாக நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காலத்திலும் சரி
இது போன்ற நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், 2014_ல் நடைபெறுகின்ற இந்தத் தேர்தலில் திடீரென்று தேர்தல்
ஆணையம் இது போன்ற கட்டுப்பாட்டினை விதிப்பதால் இந்தத் தொகுதியில்
போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரே இங்கு
வர முடியாத சழ்நிலை நிலவுகிறது.
தேர்தல் என்று வந்துவிட்டாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்
செயல்பாட்டை முற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பல்வேறு ஆணைகளை
தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. எந்த ஒரு சிறிய உத்தரவு வெளியிட
வேண்டுமென்றாலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இது
ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது ஆகும். ஆட்டைக் கடித்து மாட்டைக்
கடித்து மனிதனையும் கடிப்பது என்று சொல்வார்களே, அதைப் போல, இப்போது
வேட்பாளரே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிற்க முடியாத சழ்நிலையை தேர்தல்
ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் வேட்பாளர் பெயரைக் கூட
உச்சரிக்கக் கூடாதென்றும், இத்தொகுதி வேட்பாளர் என்று கூட சொல்லக்கூடாது
என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனநாயகத்தையே
கேலிக்கூத்து ஆக்குவதாகும். எனவே, இது குறித்து நீதிமன்றத்தில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு
தொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்தின் இந்த
உத்தரவின் காரணமாக இந்தத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை நான்
அறிமுகம் செய்ய முடியவில்லை. இந்தத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு +இரட்டை இலை$ சின்னத்தில் வாக்களித்து
மகத்தான வெற்றி பெறச் செய்யுமாறு உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.
வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும்
வேட்பாளர்களுக்கு, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தந்த
வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவர்கள்
அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் .
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
.jpg)
No comments:
Post a Comment