Monday, April 28, 2014

காஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதல் வீர மரணமடைந்த மேஜர் உடலுக்கு அமைச்சர், பொதுமக்கள் அஞ்சலி ராணுவ மரியாதையுடன் இறுதி ஊர்வலம்!

Monday 28 April 2014
தாம்பரம்::காஷ்மீர் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணமடைந்த மேஜர் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.சென்னை கிழக்கு தாம்பரம் புரபஸர் காலனி பார்க் வியூ அபார்ட்மென்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வரதராஜன் மகன் முகுந்த் வரதராஜன் (32). ராணுவத்தில் மேஜராக பணியாற்றினார். மனைவி இந்து, மகள் அஷ்யா (3) ஆகியோருடன் பெங்களூரில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தார்.
 
கடந்த 25ம் தேதி மாலை காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் கடுமையாக சண்டையிட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில், மேஜர் முகுந்த் வரதராஜன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து வீர மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்றிரவு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் கிழக்கு தாம்பரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.இதையடுத்து இன்று காலையில் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
 
அரசு சார்பில் அமைச்சர் சின்னையா, கலெக்டர் பாஸ்கரன், திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.ராஜா, அதிமுக சார்பில் நகரமன்ற தலைவர் கரிகாலன், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட தலைவர் எஸ்.டி. நெடுஞ்செழியன், பாஜ சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம், மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சோமு, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மதிமுக வேட்பாளர் மாசிலாமணி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து ராணுவ மரியாதையுடன், பெசன்ட் நகரில் எரிவாயு தகன மேடையில் இறுதி சடங்கு நடந்தது. முன்னதாக தமிழக அரசு அறிவித்த ரூ.10 லட்சத்தை முகுந்த் குடும்பத்தாரிடம் அமைச்சர் சின்னையா வழங்கினார்.

No comments:

Post a Comment