Monday 28 April 2014
இலங்கை::யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை::யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.
முன்னுரிமை அடிப்படையில் பணியாளர்களது சேவைகளையும் ஏனைய தகைமைகளையும் கருத்தில் கொண்டு இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
நிரந்தர நியமனப் பத்திரங்களை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநகர முதல்வர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆணையாளர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன..
இன்றைய தினம் நிரந்தர நியமனங்களைப் பெறுகின்ற யாழ்.மாநகர சபையின் பணியாளர்கள் தங்களது நியமனங்களை சரிவரப் பயன்படுத்தி, தொழிலில் விஸ்வாசம் கொண்டு, மேலதிகாரிகளுக்கு மதிப்பளித்து இச்சபையின் சேவைகள் மக்களுக்கு ஒழுங்குறக் கிடைக்க சேவையாற்ற வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபை பணியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் இன்றைய தினம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நேர்மை, யதார்த்தம், நடைமுறைச் சாத்தியம் போன்ற முக்கிய விடயங்களை முன்னிறுத்திய அரசியலையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். இந்த வழிமுறையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த வழிமுறை மூலம்தான் எமது மக்களது பல்வேறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த வழிமுறையில் நம்பிக்கை இல்லையேல் அதனை நாங்கள் எப்போதோ கைவிட்டிருப்போம்.
தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் நானும் ஒர் ஆரம்ப கட்ட போராளி என்ற ரீதியில் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பாரிய தார்மீகப் பொறுப்பு எனக்குள்ளது.
அந்த ரீதியில்தான் எனது மக்களுக்கான பணிகளில் நான் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றேன்.
கடந்த மாநகர சபைத் தேர்தலில் நாம் இந்தச் சபையை வென்றெடுத்தோம். அதன்மூலம் எமது மக்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தவறுகள், குறைபாடுகள் இருக்கலாம். அவை தெரியவரும் போது, உணர்த்தப்படுத்தப்படும் போது நிச்சயமாக அவை திருத்தியமைக்கப்படும். அந்தவகையில் திருப்தியான பணியையே எமது மக்களுக்குத் தொடர்ச்சியாக நாம் வழங்குவோம்.
இந்த நியமனங்கள் வழங்குவதில் பணியாளர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் மறுபரிசீலனை செய்யப்பட்டே அவை நியாயமான வகையில் இன்று இந் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதில் எவ்வித அழுத்தங்களும் இல்லை என்பதை இங்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஆணையாளரினதும் சபையின் உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புக்கள் ஒழுங்குறக் கிடைத்ததால் இந்நியமனங்களை நியாயமான முறையில் வழங்க முடிந்துள்ளது.
இன்றும் நிரந்தர நியமனங்கள் பெற பலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் கிடைப்பதற்கான வழிவகைகளை நான் ஆராய்ந்து வருகிறேன். இன்னும் சில நாட்களில் அதற்கான தீர்வை எட்ட முடியும்.
சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இங்கே ஒன்றிணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதைப் போல் இவ்வாறான இணைவுகள். எமது மக்களுக்கான சேவைகளின் போது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது. இதற்காக நான் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய மாநகர முதல்வர், இச்சபையின் மூலம் இதுவரையில் 700 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகளவிலான ஆளணி இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கட்சி நீண்டகாலம் இச்சபையை ஆளுகின்றது எனில் வரலாற்றில் இதுவே முதற்தடவை என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment