Monday 28 April 2014இலங்கை::தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறும் சிங்கள பேரினவாத அரசுகளால் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் எனக்கோரும் வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியலாநிதி சி.சிவமோகனின் தனிநபர் அவசர பிரேரணை, பேரவையில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி.யினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று (28.04.2014) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிங்கள பௌத்த பேரினவாதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தால் 03 வருடங்களுக்கு என்று மட்டும் கொண்டு வரப்பட்ட குறித்த பயங்கரவாத தற்காலிக ஏற்பாட்டுச் சட்டம், அதனைத் தொடர்ந்து வந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் 1982ம் 1988ம் ஆண்டுகளில் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.
தமிழ் மக்களை மட்டும் இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட குறித்த சட்டம், முன்னறிவித்தல் இன்றி எவரையும் எவ்விடத்திலும், தம் விருப்புக்கு ஏற்ப பொய்க்குற்றம் சுமத்தி கைதுசெய்யலாம் எனும் அவசர கைதுகளுக்கும், பிணையில் எடுக்க முடியாத தடுப்பு காவலுக்கும், நீண்ட நேர சித்திரவதைகளுடன் வற்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கும், பொதுவில் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத அந்த குற்ற ஒப்புதல் பத்திரத்தை கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கும், தாம் விரும்பாத ஊடகத்தை தடை செய்வதற்கும் வழி வகை செய்கின்றது.
1966ம் ஆண்டு ஐ.நா. சபையால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டு ஒப்பந்தம், சட்டவிரோத கைதுகள், பாரபட்சமான இன மத பாகுபாடுகளுடனான விசாரணைகள், மனித சித்திரவதைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், ஐ.நா. சபையின் சரத்துகளுக்கு முரணான குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரையும் வட மாகாண சபை ஊடாக கோரும் குறித்த பிரேரணையை, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி.யினர் மிகப்பலமாக எதிர்த்த போதிலும், ஆளும்கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பினரின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment