Tuesday, April 29, 2014

உக்ரைனில், ரஷ்யாவின் தூண்டுதலை நிறுத்த வேண்டும்: ஒபாமா!!

Tuesday, April 29, 2014
கோலாலம்பூர்::மலேசியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, 
ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு பார்வையாளர்களை உளவாளிகள் என்று கூறி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஒத்துழைக்கும் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொள்ள வேண்டும். கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குண்டர்களுக்கு அந்நாடு ஆதரவளிக்க கூடாது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி ரஷ்யா நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஜி 7 நாடுகள் ஒப்புதல் அளித்தன. 
இது உக்ரைன் பிரச்சினைக்கு ராஜரீதியாக தீர்வு காண வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும். ரஷ்யாவுக்கு ஒரு தகவலை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உக்ரைனில் அந்நாடு மேற்கொண்டு வரும் பிரிவினைவாத தூண்டுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும். 
இந்த விவகாரத்தில் ரஷ்யா நீண்ட நாட்களாக கடைபிடித்து வரும் ஆத்திரமூட்டும் வழிமுறைகளுக்கு மாறாக இப்பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அந்நாடு முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகரித்து கொண்டே இருக்கும் என்று ஒபாமா கூறினார்.  
மேலும் அவர் கூறுகையில், சீனாவுக்கு செல்லும் நடுவழியில் காணாமல் போன விமானத்தை தேடும் பணிக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தனது நாடு தயாராக உள்ளது என்றும் ஒபாமா தெரிவித்தார். 
இதற்கிடையே உக்ரைனில் முகாமிட்டுள்ள ஜெர்மனி தலைமையிலான ராணுவ பார்வையாளர்கள் நேட்டோவின் உளவாளிகள் என்று ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

No comments:

Post a Comment