Monday, April 28, 2014

நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னரே கமலேந்திரனை குற்றவாளியெனக் கருதி கட்சியிலிருந்து நீக்கியமை வருத்தமளிக்கிறது: விக்கினேஸ்வரன்!

Monday 28 April 2014
இலங்கை::நீதிமன்றம் கமலை குற்றவாளி என இனம் காண்பதற்கு முன்னரே கட்சி அவரை குற்றவாளி என தீர்மானித்தது கவலையளிப்பதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசரும், வட மகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு மாகாண சபையின் எட்டாவது அமர்வு அவைத்தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் புதிதாக நியமிக்கப்பட்ட தவராசா கலந்து கொண்டிருந்தார்.
இந்த மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கந்தசாமி கமலேந்திரன், நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சியன் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார். இந்நிலையில், அவரைக் கட்சி நீக்கியதுடன் அவரின் பதவிகளும் பறிக்கப்பட்டது.
 
இந்நிலையில், சபையின் புதிய உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் தவராசா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று சபைக்கு வந்து தனது கன்னியுரையை ஆற்றியிருந்தார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்றுப் பேசிய வடக்கு முதலமைச்சர், சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதாவது, சபையின் எதிர்க்கட்சித் தலைவராக கடந்த நான்கு மாதங்களாக கமலேந்திரன் செயற்பட்டிருந்தார்.
 
இவ்வாறான காலப்பகுதியில், நெடுந்தீவுக் கொலை வழக்கின் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற உத்தரவிற்கமைய தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார். ஆனால், இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்ற போது அவருடைய சொந்தக் கட்சியான ஈபிடிபி அவரை குற்றவாளியெனக் கருதி கட்சியிலிருந்து நீக்கியிருக்கின்றது.
 
அதாவது, குற்றச்சாட்டிற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்னதாகவே அவருடய கட்சி தீர்ப்பை வழங்கி செயற்பட்டுள்ளமை மிகுந்த கவலையளிப்பதாகவே இருக்கின்றது. எனினும் புதிய உறுப்பினரையும் வரவேற்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment