Monday, April 28, 2014

வருமான வரி வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆஜராவது எப்போது?மே19ல் எழும்பூர் நீதிமன்றம் முடிவு!

Monday 28 April 2014
சென்னை::ஜெயலலிதா மீதான வருமான வரி கணக்கு (ரிட்டர்ன்) தாக்கல் செய்யாத வழக்கு இன்று எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகும் தேதியை மே 19ம் தேதி முடிவு செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை கடந்த 1991-92, 1992-93 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை. 1993-94ம் ஆண்டுக்கு, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமானங்களுக்கான ஆவணங்களையும் வருமான வரி துறையிடம் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா மீது வருமான வரி துறையினர், கடந்த 1996ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
 
வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி ஜெயலலிதாவும், சசிகலாவும், பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியாயின. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்பின், இருவரும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜனவரியில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ‘எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரி தொடர்பான வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.பின்னர், தேர்தலை காரணம் காட்டி, வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. மேலும், தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதா, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதற்கிடையே, சசிகலா 28ம் தேதி ஆஜராவார் என்று அவரது சார்பில் எழும்பூர் நீதிமன்றதில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், இந்த வழக்கு இன்று எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா, சசிகலா ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.குமார், மணிசங்கர், செந்தில், அசோகன், கருப்பையா, தம்பா அலெக்ஸ் பரணிகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். வக்கீல் பி.குமார் வாதிடும்போது, ‘இந்த வழக்கை முடிக்க ஜூன் 6ம் தேதி முதல் மேலும் 3 வாரங்களுக்கு கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகுதான், ஜெயலலிதா, சசிகலா ஆஜராவது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது’ என்றார். வருமான வரித்துறை வக்கீல் ராமசாமி, ‘தமிழகத்தில் தேர்தல் 24ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு தேதியை முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.
 
அதற்கு சசிகலாவின் வக்கீல் செந்தில், நீதிபதியிடம், ‘வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும். எனவே, மே 16ம் தேதிக்கு பிறகே அவர்கள் ஆஜராவது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்’ என்றார். இதை ஏற்று கொண்ட மாஜிஸ்திரேட், இந்த வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் எப்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென மே 19ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.

No comments:

Post a Comment