Friday, April 18, 2014

திவ்வியன் என்பவரே புலிகளை மீளமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்: ரோஹன் குணரத்ன!

Friday, April 18, 2014
இலங்கை::2009ம் ஆண்டின் பின்னர் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் இருந்து இலங்கைக்கு, பாரிய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரோஹன் குணரத்ன தெரிவித்துள்ளார். எனவே, சர்வதேசத்தில் இயங்கும் விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு தகர்க்கப்படல் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
முன்னர் சுயாதீன நிபுணராக இருந்த குணரத்ன, தற்போது இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் ஆலோசராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில்,புலிகள் 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர், திவ்வியன் என்பவரே புலிகளை மீளமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
நார்வேயில் உள்ள நெடியவனின் உதவியுடன் தமிழகத்தில் இருக்கும் தளத்தை பயன்படுத்தி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, திவ்வியனுடன் கோபி மற்றும் அப்பன் ஆகிய முன்னாள்  புலிகளின் புலனாய்வாளர்களும் இணைந்து செயற்பட்டனர் என்று குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
 
2009ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தை தளமாகக்கொண்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தவிர கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் புலிகளுக்கு உயிரூட்டப்படுகிறது என்று ரோஹன் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment