Friday, April 18, 2014

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்கு 1.24 லட்சம் போலீஸ் குவிப்பு பறக்கும் படை சோதனை தீவிரம்!

Friday, April 18, 2014
சென்னை::தமிழகம், புதுவையில் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், தேர்தலை அமைதியாக நடத்த 1.24 லட்சம் போலீஸ் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். போலீசாரும் தேர்தல் பறக்கும் படையினரும் இரவு பகலாக வாகனங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகம், புதுவையில் வரும் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலுக்கு 5 நாட்களே உள்ளதால் உச்சக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
 
 22ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிகிறது. தேசிய தலைவர்கள் சோனியா, நரேந்திர மோடி, மாநில தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இப்போது மாநிலம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். தேர்தலை அமைதியான, நேர்மையான முறையில் நடத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் ரூ.40 கோடிக்கு மேல் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரம் 22ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும். அதன்பின் வீட்டுக்கு வீடு பூத் சிலிப் வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இதற்கிடையில் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தமிழக தேர்தல் டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால், தேர்தல் பிரிவு ஐஜி சேஷசாயி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புக்கு 1.24 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், துணை ராணுவ படையினர் 14 ஆயிரம் பேர் அடங்குவர். இவர்களை தவிர அண்டை மாநிலங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்படுகின்றனர்.தமிழக போலீசார் ஒரு லட்சம் பேர் உள்ளனர். அவர்களோடு, ஊர்க் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடந்த தேர்தலில் என்சிசி மாணவர்களும் பாதுகாப்பு பணியில் சேர்த்து கொள்ளப்பட்டனர். ஆனால் இந்த முறை அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக போலீசார், ஊர்க் காவல்படையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் போலீசார், துணை ராணுவ படையினர் என்று 1.24 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் இன்ஸ்பெக்டர் அல்லது எஸ்.ஐ. மற்றும் ஒரு துணை ராணுவ வீரர் பணியில் ஈடுபடுத்தப்படுவார். தவிர வாக்கு சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தனிப் படையினர் நிறுத்தப்பட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அனைவரையும் சோதனை செய்த பிறகே அந்த சாலையில் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். தவிர பறக்கும் படையினர் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்த வண்ணம் இருப்பார்கள்.எஸ்பி, கூடுதல் எஸ்பி, டிஎஸ்பிக்களுக்கும் ஒரு பறக்கும் படை கொடுக்கப்பட்டிருக்கும். அவர்களும் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். நகரின் முக்கியமான இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும். வாக்கு சாவடிக்கு ஆட்களை வாகனங்களில் ஏற்றி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகார் வந்தால் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

No comments:

Post a Comment