Wednesday, April 2, 2014

மீனவர் பிரதிநிதிகள் கூட்டம்: இலங்கை அரசு ஆர்வம்!

Wednesday, April 02, 2014
சென்னை::மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்துவது குறித்து, இந்தியாவின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக, இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.

பல ஆண்டுகளாக:

பாக் ஜலசந்தி உள்ளிட்ட மீன்பிடி பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே, பல ஆண்டுகளாக மீன் பிடிப்பதில் பிரச்னைகள் தொடர்கின்றன. 'இதற்கு தீர்வு காண, தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்' என, தமிழக முதல்வரிடம், மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதன் அடிப்படையில், இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்றும், இலங்கை மீனவர்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். கடந்த ஜனவரியில், சென்னை மீன்வளத்துறை அலுவலக அரங்கில், இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் இடையே பேச்சு நடந்தது. அடுத்த கட்ட பேச்சை, கடந்த மாதம், கொழும்பில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த பேச்சு ரத்தானது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த சர்வதேச மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கான ஓட்டெடுப்பை, இந்தியா புறக்கணித்தது. தங்களுக்கு சாதகமாக, இந்தியா நடந்து கொண்டதால், இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க இலங்கை அரசு முன்வந்துள்ளது.

பதிலுக்காக காத்திருப்பு:

இது குறித்து இலங்கை மீன்வள அமைச்சக அதிகாரி, நரேந்திரா ராஜபக் ஷே கூறியதாவது: இலங்கையில் நடக்கும் பேச்சுக்கு முன், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க, இந்தியாவின் சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கை சிறையில் தற்போதுள்ள, 40 மீனவர்களையும், 18 படகுகளையும் விடுவிக்க, அதிபர் ராஜபக் ஷே உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இலங்கை சிறையில், இந்திய மீனவர்கள் யாரும் அடைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். எனவே, இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் இலங்கையில் நடப்பதற்கு ஏதுவாக, இந்தியாவின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு, நரேந்திரா ராஜபக் ஷே கூறியுள்ளார்.

வெளிநாட்டு புலிகளுக்கு தடை:

இலங்கையில், 30 ஆண்டுகளாக, ராணுவத்துக்கும்,  புலிகளுக்கும் இடையே சண்டை நடந்தது; 2009ல் முடிவுற்றது.  புலி தலைவர், பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து, விடுதலை புலிகள் பலர், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்; பலர், வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். இலங்கை ராணுவ அமைச்சக அதிகாரி, ருவான் வனிக சூரியா கூறியதாவது: வெளிநாட்டிலிருந்து செயல்படும்  புலிகள் உள்ளிட்ட 16 தமிழ் அமைப்புகள், இலங்கையில், மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளன. விடுதலை புலிகள் அமைப்பு, குளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட, 16 அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. பல்வேறு அமைப்புகளின் பெயரில் செயல்படும், முன்னாள்  புலிகள், இலங்கைக்கு வந்தால் கைது செய்யப்படுவர். இவ்வாறு, வனிக சூரியா கூறினார்.   

No comments:

Post a Comment