Thursday, April 17, 2014
இலங்கை::நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி யாழ். மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்ற இந்தப் போராட்டத்தினால் மாநகர சபையின் சுகாதார சேவைகள் முடங்கியுள்ள அதே வேளையில், நகரின் சுகாதாரம் மோசமான நிலைக்கு வந்துள்ளதாகவும், இதனால் வர்த்தகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாநகர சபையில் நீண்ட காலமாகக் கடமையாற்றுகின்ற தற்காலிக சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் வேலைப் பகுதித் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக மாநகர சபையினால் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இதுவரையில் நியமனம் வழங்கப்படாத அதே வேளையில், தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதனைக் கண்டித்தும், தமக்கான நியமனங்களை வழங்க வலியுறுத்தியும் சுகாதாரத் தொழிலாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் போது, ஆனையாளருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நடைபெற்ற பேச்சுக்களின்போதும், சாதகமாக பதில் கிடைக்காததனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment