Wednesday, April 16, 2014
வேலூர்::வேலூர்–ஆரணி தொகுதி செய்யாறில் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
கடந்த ஆண்டு 2013–ல் ஜுலை மாதம் முதல் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை
மின்வெட்டு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவியது. இதனை நான், தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது பெருமையாக கூறினேன்.
இவ்வாறு
நான் சொன்னவுடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டாத புதிய
கூட்டு மின் திட்டங்கள் உட்பட மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும்
பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டு வந்த மின் உற்பத்தி சுமார் 2500
மெகாவாட் அளவுக்கு சொல்லி வைத்தாற்போல் திடீர் என ஒரே சமயத்தில் குறைந்தது.
இதன்
காரணமாக மீண்டும் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இது ஏதோ சதி செயல்
வேண்டுமென்றே மின் உற்பத்தி நிலையங்களை பழுதடைய செய்திருக்கிறார்கள் என்று
நான் தெரிவித்தேன். அதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதை
ஏற்றுக்கொள்வதை போலவே பிரதமரும், இது எதேச்சையாக நடந்தது என்று தெரிவித்து
கடிதம் எழுதினார்.
அப்போது, ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்
நடைபெற்றது. பின்னர் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டது. மின்வெட்டு
இல்லாத சூழ்நிலை மீண்டும் நிலவியது.
அதன் பின்னர், மக்களவை
பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நான் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள
சூழ்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள இந்த காலகட்டத்தில் தற்போது
மீண்டும் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன வென்று
பார்த்தால் 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தின் புதிய
அலகு, மீண்டும் ஹைட்ரஜன் வாயு கசிவின் காரணமாக 6.3.2014 முதல் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின்
நிலையத்தின் புதிய அலகு 5.4.2014 முதல் பழுதடைந்துள்ளது. கூடங்குளம்
அணுமின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த 370 மெகாட்வாட்
மின்சார உற்பத்தி பழுதின் காரணமாக தடைபட்டு, தற்போது மீண்டும் சரி
செய்யப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது.
தற்போது, மொத்தத்தில் 1,200
மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்தி குறைந்தள்ளது. தேர்தல் சமயத்தில் இது
போன்று மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதும், அ.தி.மு.க., அரசின் மீது எந்தக்
குறையையும் சுட்டிக்காட்ட முடியாத சூழ்நிலையில் இந்த் மின்வெட்டுப்
பிரச்சினையை எதிர்க்கட்சிகள், குறிப்பாக தி.மு.க. சுட்டிக்காட்டி பிரசாரம்
செய்து வரும், இதேபோன்ற பிரச்சினை தேர்தல் காலங்களில் ஏற்படுவதும்,
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மீது மக்கள் மனதில் பெருத்த
சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புதிய மின் அலகுகள் பழுது
அடைந்ததில் ஏதாவது சரி செயல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து,
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன்.
மின்சார பிரச்சினையில் மக்களுக்கு துன்பங்களை
விளைவித்து, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ்
கட்சிகளுக்கு இந்த தேர்தலில் நீங்கள் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும்
என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மத்தியிலும்,
மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது மின் உற்பத்தியை பெருக்க தேவையான
நடவடிக்கைகளை எடுக்காதவர் கருணாநிதி. எனது முந்தைய ஆட்சி காலத்தில் பைகாரா
புனல் மின் திட்டத்திற்கு மத்திய அரசு மூலம் தடை போட்டவர் கருணாநிதி.
காவிரி நதிநீர் பிரச்சினையில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர்
கருணாநிதி.
இப்படி தமிழகத்திற்கு துரோகத்தை மட்டுமே இழைந்த
கருணாநிதி, அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவிரி
பிரச்சினை குறித்த வாதம் செய்ய சட்டமன்றத்திலே நேரம் ஒதுக்கலாம்.
ஒதுக்கி
அதிலே விவாதித்து யார் தவறு செய்தார்கள்? யார் நியாயமாக நடந்து
கொண்டார்கள்? யார் நம்முடைய உரிமைகளை பெற்றுத்தர முயற்சித்தார்கள்? என்ற
உண்மையை நாட்டு மக்களுக்கு விளக்கட்டும் என்று கூறி இருக்கிறார்.
காவிரி
நதிநீர் பிரச்சினையில் பல துரோகங்களை செய்து இருக்கிறார். கருணாநிதி.
கர்நாடகம் அணைகளை கட்டிக் கொள்ள அனுமதித்தது, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த
வழக்கை தன்னிச்சையாக வாபஸ் வாங்கியது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை
மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது என அடுக்கிக் கொண்டே
போகலாம்.
கருணாநிதி சவாலை நாள் ஏற்றுக் கொள்கிறேன்.
தேர்தல் முடிந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டப்பட்ட உடன் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.
கருணாநிதியின்
துரோகங்களை பட்டியலிட நான் தயாராக இருக்கிறேன். என் கட்சியின் சார்பில்
நான் தான் பேசுவேன். இதேபோல் கருணாநிதியும் வந்து சட்டமன்ற விவாதத்தில்
கலந்து கொள்ளத் தயாரா? தி.மு.க.வின் சார்பில் துரைமுருகனோ அல்லது வேறு
பிரதிநிதிகளோ விவாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனை கருணாநிதி
ஏற்றுக் கொள்ள தயாரா? சட்டமன்றத்திற்கு வரத் தயாரா? என்னை நேருக்கு நேர்
சந்தித்து விவாதிக்க தயாரா? இதனை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறாரா, இல்லையா?
என்பது குறித்த அவருடைய முடிவை அவர் அறிவிக்க வேண்டும். இல்லை எனில்
துரோகங்கள் இழைக்கப்பட்டது உண்மை தான் என்று கருணாநிதியே ஒப்புக்
கொள்கிறார் என்று தான் அர்த்தம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க.,
பா.ஜனதாவின் 'பி' டீம் என்றும், பா.ஜனதாவை எதிர்த்து ஏன் பேசவில்லை
என்றும், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
எங்களை
பொறுத்த வரையில் நாங்கள் யாருக்கும் 'பி' டீம் இல்லை என்பதையும் எங்கள்
அணிதான் முதன்மையான அணி என்பதையும் நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்.
காங்கிரஸ்
மற்றும் பா.ஜனதா அல்லாத ஆட்சி மத்தியிலே அமைய வேண்டும் என்பதே
அ.தி.மு.க.வின் லட்சியம் ஆகும். இதை நான் 2012–ம் ஆண்டு நடைபெற்ற
அ.தி.மு.க. கழகத்தின் பொதுக்குழுவிலேயே அறிவித்தேன்.
இந்த லட்சியம்
நிறைவேற வேண்டும் என்றால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40
மக்களவை தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றே தீரவேண்டும். எனவே தான்
இந்த தேர்தலில் 40 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
தற்போதுள்ள
சூழ்நிலையில் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும்
நிலை தான் உள்ளது. அதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம். மத்தியிலே காங்கிரஸ்
அல்லாத ஆட்சி, பா.ஜனதா அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பது தான்
அ.தி.மு.க.வின் லட்சியம்.
இதுபோன்ற ஆட்சியில் அ.தி.மு.க. முக்கிய
பங்கு வகிக்க வேண்டும் என்றால் 40 இடங்களிலும் நாம் வெற்றி பெற்றே
தீரவேண்டும். அதுபோன்றதொரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொடுக்க
வேண்டும்.
அதை உங்களால் தான் சாதிக்க முடியும். அப்பொழுது தான்
தமிழ்நாட்டின் குரல் மத்தியில் ஓங்கி ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகள்
நிலைநாட்டப்படும். சிறுபான்மையினர் நலன்கள் உறுதி செய்யப்படும்.
எனவே வருகிற பாராளுமன்ற மக்களவை தேர்தலில் உங்களுடைய வாக்குகளை அ.தி.மு.க.விற்கு சிந்தாமல், சிதறாமல் நீங்கள் அளிக்க வேண்டும்.
தமிழர்கள்
நலன்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி
கட்சிகள், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆகியவற்றின்
வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் படுதோல்வி அடைய செய்ய வேண்டும்
என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பா.ஜனதாவை
பொறுத்த வரை அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் காவிரி நதிநீர் பிரச்சினை
குறித்தோ, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்தோ, இலங்கை தமிழர்
பிரச்சினை குறித்தோ, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தோ, கச்சத்தீவு
பிரச்சினை குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
எனவே தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை என்று தான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
1996–ம்
ஆண்டு முதல் மத்தியிலே கூட்டணி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ்
மற்றும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சிகள் மத்தியில் ஆட்சி
புரிந்துள்ளன. ஆனால் தற்போதைய பாராளுமன்ற தேர்தல் முற்றிலும் மாறுபட்ட
தேர்தல் முடிவுகளை அளிக்கக்கூடியது.
இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

No comments:
Post a Comment