Friday, March 14, 2014
இலங்கை::கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் ஒருவர் காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ரட்ணகுமார (வயது 50) என்ற பொலிஸாரே காயமடைந்தவராவார் பொலிஸார் தாம் தேடி வந்த 'பயங்கரவாத' சந்தேக நபர் ஒருவரை வழிமறித்த போதே அவர் தம்மிடமிருந்த துப்பாக்கியால் பொலிஸாரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றார் என்று கூறப்படுகின்றது. அதை அடுத்து தர்மபுரம், கண்டவளை, முரசுமோட்டை, விசுவமடுப் பகுதி எங்கும் நேற்று பதற்ற நிலை . வீதிகளில் போவோர், வருவோர் அனைவரும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கோபி அல்லது காசியன் என்று அழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம் (வயது - 31) என்பவரைப் பயங்கரவாதப் புலனாய்ப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காகப் பொலிஸார் தேடுகின்றனர் என்றும், அவர் குறித்த தகவலைப் பொலிஸாருக்கு வழங்குமாறும் கோரும் அறிவுறுத்தல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கை ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. அதேசமயம், வடக்கில் சில பகுதிகளில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை ஒட்டிய சந்தேகத்தின் பேரில் பொலிஸார் சிலரை சில தினங்களுக்கு முன்னர் கைது செய்து துருவித்துருவி விசாரணை செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே புலனாய்வாளர்கள் நேற்று தர்மபுரத்தில் மேற்படி கோபி என்ற சந்தேக நபரை இலக்கு வைத்தனர் என்றும், ஆனால் அவர் தம்மை வழிமறித்த பொலிஸாரைச் சுட்டுக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் ஒரு தகவல் தெரிவித்தது. மேற்படி சந்தேக நபர் தப்பியோடியமையை அடுத்து அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையான படையினர் குவிக்கப்பட்டனர். தேடுதலும் முடுக்கி விடப்பட்டது. இதேசமயம், மேற்படி சந்தேக நபர் தப்பி ஓடிச் சென்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த தாயும் சிறுமியான மகளும் புலனாய்வாளர்களினால் விசாரிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது.
கண்டாவளை - முசிலம்பட்டி இந்திய வீட்டுத் திட்டத்தில் வாழ்ந்து வரும் ஜெயக்குமாரியும் அவரது மகள் விபூசிக்காவுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர் என ஒரு தகவல் தெரிவித்தது.
தாயார் ஜெயக்குமாரி காணாமல்போன தனது கணவன் மற்றும் மகனுக்காக, தனது மகள் விபூசிக்காவுடன் பல போராட்டங்களில் பங்கெடுத்தவர். பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் யாழ். வந்திருந்த போது நடந்த புலிகள் சார்பு கவனயீர்ப்புப் போராட்டத்தில் வெளிப்படையாகத் தன்னை அடையாளப்படுத்தி பங்கு கொண்டவர்.
புலிகள் சார்பு சனல்4' போன்ற பல சர்வதேச ஊடகங்களில் காணாமற்போனோரின் உறவுகள் சார்பில் பகிரங்கமாக - உரத்து - குரல் கொடுத்து வருபவர். மகள் விபூசிக்காவும் தனது தந்தை மற்றும் அண்ணனுக்காகத் குரல் கொடுத்து வருபவர்.
நேற்று பொலிஸாரைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியவர் என்று கருதப்படும் சந்தேக நபர் இவர்களது வீடு ஊடாகவே தப்பிச் சென்றார் என்றும், அதையடுத்தே இவர்கள் மீது படையினர் தற்போது பாய்ந்துள்ளனர் என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்தன.
thank you
srilankaa.blog.com
thank you
srilankaa.blog.com

No comments:
Post a Comment