Friday, March 14, 2014

வலி. வடக்கு மீள்குடியேற்றம் இப்போதைக்கு சாத்தியமில்லை! கைவிரித்தார் படைத் தளபதி!

Friday, March 14, 2014
இலங்கை::வலி. வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது இப்போதைக்கு சாத்தியமில்லை என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரோரா கைவிரித்துவிட்டார். வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத் தலைவரை நேற்று முன்தினம் புதன்கிழமை பலாலி படைத் தலைமையகத்துக்கு அழைத்து இந்த தகவலை படைத் தளபதி தெரிவித்தார்.
 
கால் நூற்றாண்டின் பின்னராவது தமது மீள்குடியேற்றம் சாத்தியமாகும் என்ற கனவில் இருந்த மக்களுக்கு படைத் தளபதியின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்க தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்தார்.
 
மயிலிட்டியில் முதற்கட்டமாக மக்களை மீள்குடியேற்றுவதாகத் தெரிவித்த படைத்தளபதி, விமானத் தளத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதுவும் சாத்தியமில்லை என கைவிரித்து விட்டதாகவும் அவர் கூறினார். வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக இதுவரை தமது சங்கம் படையினருடன் 6 சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக கூறிய அவர், அத்தனையும் வீணாகிவிட்டதாகவும் கவலை வெளியிட்டார்.

ஒவ்வொரு சுற்றுப் பேச்சுக்களின்போதும் மீள்குடியேற்றம் குறித்து எமக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. எமது மக்களும் மீள்குடியேற்றம் குறித்து ஆவலுடன் இருந்தனர். தற்போது அனைவரும் நம்பி ஏமாந்துவிட்டோம் எனவும் குணபாலசிங்கம் அதிருப்தி வெளியிட்டார். என்னை அழைத்து பேசிய படைத் தளபதி, மயிலிட்டியில் இப்போது மக்களை மீள்குடியேற்றுவது சாத்தியமில்லை என்று கூறினார். விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு அதனால் அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
 
ஆனால், மயிலிட்டியில் மீன்பிடிக்க அனுமதிக்கலாம். துறைமுகத்தை பயன்படுத்தலாம். அதுவும் பகலில் சென்று இரவில் திரும்பிவிட வேண்டும் என இராணுவத் தளபதி கூறினார்.
 
இதேவேளை, மயிலிட்டி பகுதி மக்களை வயலாய் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யும் யோசனை ஒன்றையும் யாழ். படைத் தளபதி முன்வைத்தார்.

No comments:

Post a Comment