Saturday, March 15, 2014

பழைய நினைவுகளை ரஜினியுடன் பகிர்ந்து கொண்டேன்: சென்னையில் அழகிரி பரபரப்பு பேட்டி!

Saturday, March 15, 2014
சென்னை::நடிகர் ரஜினிகாந்தை, அவரது வீட்டில் நேற்று, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்துப் பேசினார். 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில், அழகிரியின் மகன் தயாநிதியும் பங்கேற்றார்.

தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்புச் செயலராக இருந்த, அழகிரி சமீபத்தில, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்தும், பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர் தன் எதிர்கால திட்டம் குறித்து, தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக, நேற்று காலையில், ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பிற்குப் பின், அழகிரி அளித்த பேட்டி: என்னுடைய நல்ல நண்பர் ரஜினி; அவரது, 'கோச்சடையான்' படத்தின் பாடல்கள், டிரைலர் மிக நன்றாக வந்துள்ளது. அதற்காக அவரை பாராட்டினேன். அவரிடம் நான் அரசியல் பேசவில்லை. எங்கள் இல்ல திருமணத்திற்கு வந்திருந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். அவரது நண்பர் அம்பரீஷ், எனக்கும் நண்பர். அவரது உடல் நலம் பற்றி விசாரித்தேன். 'உங்களை போலவே அம்பரீஷும் வெளிப்படையானவர்' என, என்னை பாராட்டினார். இவ்வாறு, அழகிரி கூறினார்.

அடுத்த திட்டம் என்ன என்ற கேள்விக்கு, அவர், மேலும் அளித்த பதில்: மதுரையில், 16ம் தேதி நடத்தவிருந்த கூட்டத்தை, 17ம் தேதிக்கு மாற்றி உள்ளேன். அதில், ஆதரவாளர்கள் என்ன சொல்கின்றனரோ அதை செய்வேன். அமைதியாக இருங்கள் என்றால், அமைதியாக இருந்து விடுவேன். நானாக எதையும் செய்யப் போவதில்லை. நிச்சயமாக தனி கட்சி துவங்க மாட்டேன். தி.மு.க.,வில் நான் இருந்தால் தான், கட்சிக்கு நல்லது என, நிறைய பேர், என்னிடம் கூறி வருகின்றனர். அவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. கட்சியில் தலைவருக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதை நான் மட்டுமல்ல; முக்கிய நிர்வாகிகளும் உணர்ந்துள்ளனர். பொறுப்பாளர்கள் எல்லாரும், ஒன்றுக்கும் உதவாதவர்களாக உள்ளனர். அதனால், நான் ஏதாவது செய்தாக வேண்டும் என, கட்சியினர் விரும்புகின்றனர். இவ்வாறு, அழகிரி கூறினார்.
நட்பின் அடிப்படையில் நடந்த சந்திப்புகளா?

பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்களை, அழகிரி சந்திக்க சென்றபோது, அவரது தீவிர ஆதரவாளரும், தி.மு.க., - எம்.பி.,யுமான, கே.பி.ராமலிங்கம் உடனிருந்துள்ளார். அழகிரிக்கு, ஆங்கிலம் சரளமாக பேச வராது என்பதால், அழகிரியின் கருத்துக்களை, பா.ஜ., - காங்கிரஸ் தலைவர்களிடம், கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாராம். தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியலில், கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற கோபத்தில் உள்ள கனிமொழி, அழகிரியின் அனைத்து முடிவுகளுக்கும், ஆதரவு அளிப்பதாகவும், தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. ராஜ்நாத் சிங் வீட்டில், அழகிரி ஒரு மணி நேரம் இருந்ததாகவும், மன்மோகன் சிங்கிடம், 20 நிமிடங்கள் வரை, சந்திப்பு நிகழ்ந்ததாகவும், ராமலிங்கம் கூறுகிறார். ''சந்திப்பின் போது, அழகிரி தெரிவித்த கருத்துக்களை என்னால், வெளியிட முடியாது. நெருக்கடியில் இருக்கும் அவருக்கு, நண்பனாக உதவுகிறேன். எனவே, ஆள்காட்டியாக நான் செயல்பட முடியாது. தி.மு.க., தலைமை கேட்டால் கூட, பா.ஜ., - காங்கிரஸ் தலைவர்களிடம், அழகிரி தெரிவித்த கருத்துக்களை வெளியிட மாட்டேன்,'' என்று ராமலிங்கம் கூறினார். இதற்கிடையே, 'எம்.பி.,யாக இருக்கும் அழகிரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள, டில்லி வீட்டை காலி செய்ய அவர் சென்றார். டில்லி செல்ல இனி வாய்ப்புகள் குறைவு என்பதால், பா.ஜ., காங்கிரஸ் தலைவர்களை அவர் சந்தித்தார்' என்றும், அழகிரி தரப்பில் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment