Sunday, March 16, 2014

கிரீமியாவில் பொது வாக்கெடுப்பு உக்ரைனில் தொடர்ந்து பதற்றம்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
Sunday, March 16, 2014
கீவ்::உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியா தன்னாட்சி பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.சோவியத் யூனியனில் இருந்து தனி நாடாக பிரிந்தது உக்ரைன். இதன் தென் கிழக்கு பகுதியில் சுயாட்சி பெற்ற கிரீமியா உள்ளது. இங்கு ரஷ்யர்கள் பெரும்பான்மையோர் வசிக்கின்றனர். ரஷ்ய மொழி பேசும் இந்த மக்கள், கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு உக்ரைன் ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர்.இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகோவிச் விரட்டப்பட்டார். இடைக்கால அரசு அங்கு ஏற்படுத்தப்பட்டது. ராணுவ புரட்சி மூலம் நாட்டை பிடித்துள்ளனர். கிரீமியாவில் உள்ள ரஷ்யர்களை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை என்று ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாக கூறினார். அதனால் அங்கு ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் தீர்மானம் கிரீமியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், ரஷ்யாவுடன் கிரீமியா இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேற்கத்திய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. அதை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோல்வி அடைய செய்தது. இதை தொடர்ந்து, ரஷ்யாவுடன் கிரீமியா இணைவதற்கு ஆதரவாக இன்று கிரீமிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, விரைவில் நாங்கள் ரஷ்யாவுடன் இணைவோம் என்று கிரீமியாவில் உள்ள ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

No comments:

Post a Comment