Sunday, March 16, 2014

காணாமல் போன மலேசிய விமானம் கடத்தலா? ஒன்பது நாளாகியும் தகவல் தெரியாமல் தவிப்பு!!

Sunday, March 16, 2014
கோலாலம்பூர் ::சீனா செல்லும் வழியில், மலேசிய பயணிகள் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்,'' என, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

கடந்த, 7ம் தேதி இரவு, மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, "மலேசியன் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம், 239 பேருடன், சீன தலைநகர், பீஜிங் புறப்பட்டது. அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை, அந்த விமானம் இழந்தது.ஒரு வாரம் கடந்தும், விமானத்தை பற்றிய விவரம் கிடைக்கவில்லை.இந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த, சமூக சேவகர், சந்திரிகா சர்மா உள்ளிட்ட, ஐந்து இந்தியர்களும், கனடாவில் வசிக்கும், சேலத்தை சேர்ந்த, மறைந்த தலைவர், மோகன் குமாரமங்கலத்தின் பேரன், முக்தேஷ், மற்றும் அவரது சீன மனைவி, ஜானாவும், பயணித்துள்ளனர்.விமானத்தை தேடும் பணியில், மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, உள்ளிட்ட, 14 நாடுகளைச் சேர்ந்த, 58 விமானங்களும், 43 கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.இந்த விமானத்தை தேடும் பணி, இந்திய பெருங்கடல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
கடத்தலா?
 
மலேசியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில், விமானம் பறந்த போது, வேண்டுமென்றே விமானத்தின் அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே, இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம், என சந்தேகிப்பதாகவும், மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.விமானம் காணாமல் போய், ஒன்பது நாட்களாவதால், பொறுமை இழந்த, பயணிகளின் உறவினர்கள், மலேசிய அரசை, நெருக்க துவங்கி விட்டனர். இந்த விமானத்தில் அதிக அளவு சீன பயணிகள் பயணித்துள்ளனர். எனவே, சீன அரசும், விமானம் குறித்த அனைத்து தகவல்களையும், ஒளிவு மறைவில்லாமல் தெரிவிக்கும்படி, மலேசிய அரசை கண்டித்தது.விமானத்தை பற்றி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில், மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், நிருபர்கள் கூட்டத்தில் நேற்று கூறியதாவது:
 
தகவல் தொடர்பு துண்டிப்பு:


மலேசிய எல்லையை கடந்து, வியட்நாம் எல்லைக்குள் சென்றதும், சம்பந்தப்பட்ட விமானத்தின் டிரான்ஸ்பாண்டர்கள், வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பம் நன்கு தெரிந்த, விமானத்தில் பயணித்த நபர் தான், இதை செய்திருக்க முடியும்.விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகும், ஏழு மணி நேரம் விமானம் பறந்ததாக, செயற்கை கோள், தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம். இனி இந்த கோணத்தில், விமானத்தை தேடும் பணியை முடுக்கியுள்ளோம்.வடக்கு பகுதியில், கசகஸ்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் தாய்லாந்துக்கு இடைப்பட்ட பகுதியிலும், தெற்கு பகுதியில் இந்தோனேசியாவுக்கும், இந்திய பெருங்கடலுக்கும் இடையே இந்த விமானம் உள்ளதாக சந்தேகிக்கிறோம்.இவ்வாறு ரசாக் கூறினார்.

இவரது பேட்டி முடிந்ததும், மாயமான விமானத்தை ஓட்டி சென்ற பைலட், ஜகாரி அகமது ஷாவின் வீட்டை,போலீசார் முற்றுகையிட்டு, சோதனை நடத்தி வருகின்றனர். விமானத்தில் பயணித்த மற்ற ஊழியர்களின் பின்புலத்தையும், விசாரித்து வருகின்றனர்.
 
அதிகாரிகள் தவிப்பு:
 
விமானம் கடத்தப்பட்டிருந்தால், எதற்காக கடத்தப்பட்டது, கடத்தல்காரர்களின் கோரிக்கை என்ன என்ற விவரங்கள் தெரிந்திருக்கும். எனவே, விமானம் கடத்தப்பட்டதா என்பதையும், இன்னும் உறுதிப்படுத்த முடியாமல், மலேசிய அதிகாரிகள் தவிக்கின்றனர்.மாயமான விமானத்தில் இருந்து இன்னும் சிக்னல்கள் வந்து கொண்டிருப்பதாக, பிரிட்டனை சேர்ந்த செயற்கை கோள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment