Thursday, March 13, 2014

சிட்னியில் வாழும் இலங்கையர் கத்தியால் குத்திக் கொலை!

Thursday, March 13, 2014
இலங்கை::சிட்னி::ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை வம்சாவளி அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்
 
சிட்னியின் மேற்கில் அமைந்துள்ள பென்டல்வே பிரதேசத்தில் Aussie Unity Real Estate என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ஈசன் வேலுப்பிள்ளை, பென்டல்வே பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிசார் அறிவித்துள்ளார்கள்.
இன்று அதிகாலை அலுவலகத்திற்கு வந்த திரு.ஈசன், குப்பையைக் கொட்ட முனைந்த சமயத்தில் ஆயதபாணியொருவர் அவரை நெருங்கியிருக்கிறார். பின்னர், அவரது மார்பில் குத்தி விட்டுத் தப்பியோடியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
ஸ்தலத்திற்கு அருகில் இருந்தவர்கள் திரு.ஈசனைக் காப்பாற்ற முனைந்த சமயம், மற்றொரு ஊழியர் அருகிலுள்ள சுப்பர் மார்க்கெட்டுக்கு சென்று பொலிசாரை அழைத்திருககிறார். பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்த சமயம், திரு.ஈசன் ரத்த வெள்ளத்தில் இருந்ததைக் கண்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம், அவரது உயிர் பிரிந்ததாக சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களுக்குள் இந்தப் பிரதேசத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிசார் 34 வயதுடைய நபரைக் கைது செய்துள்ளார்கள். சந்தேக நபர் விசாரிக்கப்படுவதாக பொலிசார் அறிவித்துள்ளார்கள். திரு.ஈசன் தாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லையென பொலிசார் கூறியபோதிலும், கைது செய்யப்பட்டவர் வெள்ளையினத்தவர் என்று தெரியவருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
 
ஹொலிரொயிட் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அடம் பிலிப்ஸ் தகவல் தருகையில், கொலையாளியும்,கொலையுண்டவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவதாகக் கூறினார். இந்தக் கொலை ரியல் எஸ்டேட் வணிகத்துடன் தொடர்புபட்டதாகத் தோன்றவில்லையெனவும் அவர் கூறினார்.
 
திரு.ஈசன் வேலுப்பிள்ளை 20 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்திருந்தார். படுகொலை செய்யப்படும் சமயத்தில், அவரது மனைவி கர்ப்பணி என்பதும் குறிப்பிடத்தக்க விடயம். இருவரும் தமது முதலாவது பிள்ளையை எதிர்பார்த்துக் காத்திருந்த சமயம், இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.
 
திரு,வேலுப்பிள்ளை அவுஸ்திரேலியத் தமிழ் சமூகம் மத்தியில் நன்மதிப்பை வென்றவர் எனத் தெரிவதாக கார்டியன் இணையத்தளம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment