Thursday, March 13, 2014
சென்னை::தமிழ்நாட்டில் காங்கிரஸ் தவிர
அனைத்துக்கட்சிகளும், தேர்தலை சந்திக்க தயாராகி விட்டனர். அ.தி.மு.க.
தனியாகவும் இறங்கிவிட்டது. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. பா.ஜனதா கூட்டணியிலும்,
ஒன்றிரண்டு நாட்களில் தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசுடன் எந்த கட்சியும் கூட்டணி சேர முன்வரவில்லை. இந்த நிலையில்
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று ஜி.கே.வாசன்
நேற்றுமுன்தினம் தெரிவித்தார். காங்கிரஸ் மேலிடமும் இந்த முடிவை
ஏற்றுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப
மனுகொடுத்தவர்களில் தகுதியானவர்களின் உத்தேச பட்டியல் தயாரித்து காங்கிரஸ்
மேலிடத்துக்கு அனுப்பப்பட்டது. நேற்றுமுன்தினம் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட
மேலிட தேர்வு குழு வேட்பாளர் பட்டியலை ஆய்வு செய்தது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் யார் யாரை நிறுத்தலாம்
என்பது பெரும்பாலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்
இறுதிபட்டியல் தயாரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுக்கு
அனுப்பப்படுகிறது. இன்று வேட்பாளர்கள் பட்டியல் சோனியா காந்தியின்
பார்வைக்கு வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிககன் தற்போது டெல்லியில் தங்கி
இருக்கிறார். திங்கட்கிழமை சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது தமிழ்
நாட்டின் அரசியல் நிலவரம், காங்கிரஸ் எவ்வாறு சந்திப்பது என்பது குறித்து
ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் தனித்து
போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் உயர்மட்ட குழுவினர் மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை
சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை இன்று
சந்திக்கலாம் என்று தெரிகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இன்று இரவு சென்னை திரும்புவார். நாளை
அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு தமிழக
காங்கிரசார் தேர்தல் பணியில் தீவிரமாக <ஈடுபடுவார்கள் என்று
கூறப்பட்டது. தற்போது ஞானதேசிகன் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்படும்
என்று தெரிகிறது. எனவே அந்த கூட்டம் ஒருநாள் தாமதமாக நடைபெறும் என்று கட்சி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலுக்கு 2
நாட்களில் சோனியா காந்தியன் ஒப்புதல் கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு கட்சி மேலிடம் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்
பூர்வமாக அறிவிக்கும். அடுத்த வாரம் இந்த வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக
வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவர்
தெரிவித்தார்.

No comments:
Post a Comment