Wednesday, March 12, 2014
இலங்கை:::மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளுடன் கிடைத்துள்ள தடயப் பொருட்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கான உத்தரவை மன்னார் மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்த நீதவான் ஆனந்தி கனகரத்தினம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து 32 தினங்கள் நடத்தப்பட்ட அகழ்வின்போது 84 மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்ட எச்சங்களும், வேறு சில தடயங்களும் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்களுக்குரியவர்கள் ஆண்களா? பெண்களா?, அவர்களுடைய வயதென்ன?, அவர்கள் எப்படி இறந்திருப்பார்கள்? என்பவற்றைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாகவே, மன்னார் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருக்கின்றது. புதைகுழியில் எடுக்கப்பட்டவை பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்த மனித புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள மண்ணின் மாதிரிகளை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கையொன்றைப் பெறுவதற்கும், புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது, புலனாய்வு துறையினரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக் காட்சிகள் என்பவற்றையும் ஆய்வு செய்து விபரங்களைப் பெறுவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது.
அத்துடன் மன்னார் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளிடம் புதைகுழியின் வரைபடம் ஒன்றைப் பெறுமாறும் உத்தரவிடப்பட்டிருக்கின்றது” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இந்தப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள உலோகப் பொருட்களை அணு சக்தி அதிகார சபைக்கு அனுப்பி அவர்களின் அறிக்கை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அது தவிர, கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரியின் ஊடாக மேலதிக மருத்துவர்கள் இந்த உடல் எச்ச பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வரவழைக்கப்படவுள்ளனர்” என்றும் அஜித் ரோகண கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், தொடர்ந்து அந்தப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்படுமா எனக் கேட்டதற்கு, அது குறித்து தங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும், அதனை நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் அஜித் ரோகண மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment