Thursday, March 13, 2014
இலங்கை::மருத்துவ தேவைகளுக்காக ஆளுநர் நிதிய நிதியுதவி வழங்கும் வைபவம் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் 10 மார்ச் 2014 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது 54 பயனாளிகளுக்கு ரூபா 2.65 மில்லியன் நிதியுதவி மருத்துவ தேவைகளுக்காக வழங்கப்பட்டது.
ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், பிரதி செயலாளர் திரு.ஜே.எக்ஸ்.செல்வநாயகம் மற்றும் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
பின்னணி
ஆளுநர் நம்பிக்கை நிதியத்தில் இருந்து வடக்கின் 287 மருத்துவ உதவி தேவையுடையோருக்கு 14.76 மில்லியன் ரூபாய் நன்கொடை.
வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து வடக்கை சேர்ந்த 287 நோயாளிகளுக்கும் மற்றும் வாழ்வாதார உதவிகளை நாடியோருக்குமாக 14.76 மில்லியன் ரூபாய் அவர்களது சிகிச்சைக்காகவும் தேவைகளுக்காவும் இதுவரை வடமாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.
தீவிரமானதும், அபாயமானதுமான பல்வேறுபட்ட நோய்களால் 2009ஆம் ஆண்டிற்கும் 2014ஆம் ஆண்டிற்கும் இடையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண கௌரவ ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களால் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.
நோயாளிகளினுடைய சிகிச்சைக்கான மொத்தச்செலவின் ஒரு பகுதியாக இது இருந்தபொழுதிலும் இந்த உதவி அவர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆறுதலை அளித்துள்ளது.
வடமாகாணத்தில் வறுமையுடன் நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கின்ற குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் நிதியத்தின் மூலமான இந்த உதவி கடந்த பல வருடங்களாக கிடைத்து வருகின்றது. புற்றுநோய், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்ற பல்வேறு தீவிர நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் கௌரவ ஆளுநர் நிதியத்தில் இருந்து இவ்வுதவிகளை பெற்றிருக்கின்றார்கள்.
2000ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களினதும், அரச உத்தியோகத்தர்களினதும் நன்மை கருதி முன்னைய வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் நம்பிக்கை நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் தனித்தனி நிர்வாக அலகுகள் அமைக்கப்பட்டதனால் வடக்கு மாகாணத்திற்கான ஆளுநர் நம்பிக்கை நிதியம் 2007ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
தேவையுள்ள பொதுமக்களினுடைய நிதி நிலைமைகளை கருத்தில் எடுத்து மக்களின் தேவை சார்ந்த விடையங்களுக்கு இந்நிதியுதவி வழங்கப்படுகின்றது.
வறுமை நிவாரணமாக ஆகக் கூடியது 25,000 ரூபாய வழங்கப்படுகிறது. அதே போல கல்வி, விளையாட்டுத்துறை, கலாச்சார விடயங்களுக்கும் ஆகக் கூடியது 25,000 ரூபாய் வழங்கப்படுகின்றது.
மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புக்காக ஆகக்கூடியது 40,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு உன்னத சேவை செய்த மகான்களின் பெயரிலான விருதுகள் வழங்கலுக்காக ஆகக் கூடியது 25,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. உயிரை காக்கும் சத்திர சிகிச்சைகள் மற்றும் மருத்துவத் தேவைகள் ஆகியவற்றின் மொத்தச் செலவின் ஒரு பகுதியாக ஆகக் கூடியது 50,000 ரூபாய் வழங்கப்படுகின்து. அதேவேளை வடக்கு மாகாணத்தின் ஆளுநரும் ஆளுநர் நிதியத்தின் முகாமைத்துவ சபையும் மாகாண மக்களின் முக்கியத்துவம் மிக்க விடயங்களில் தீர்மானித்து இந்நிதியத்தின் மூலம் நிதியுதவி வழங்கவும் வழிவகைகள் காணப்படுகின்றன.








No comments:
Post a Comment