Saturday, March 08, 2014
சென்னை::கொழும்பில் மார்ச் 13-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு முன்னர், இலங்கை சிறைகளில் வாடும் 177 மீனவர்களையும், அவர்களின் 44 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மார்ச் 13-ஆம் தேதி கொழுப்பில் இந்தியா - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.
இது, மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் சுமூக தீர்வு ஏற்படுவதை தடுப்பதற்காக இலங்கை கடற்படை திட்டமிட்டு நடத்தும் தாக்குதலோ என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும், மத்திய அரசு இலங்கை அரசிடம் மென்மையான போக்கை கடைபிடிப்பதாலேயே தொடர்ந்து
தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகின்றனர்.
மத்திய அரசின் மெத்தனப் போக்கால், தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து, அவர்களின் வாழ்வாதரத்தை முடக்கும் செயல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே எழுதிய கடிதத்தில், மார்ச் 13 பேச்சுவார்த்தைக்கு முன்னர் மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.
கடந்த 2 ஆண்டுகளில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment