Thursday, February 13, 2014

ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் விசாரணை நடத்த அரசு இடமளிக்கக் கூடாது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!

Thursday, February 13, 2014
இலங்கை::ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், சர்வதேச விசாரணையினை இலங்கையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது எனத் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
 
இலங்கைக்கெதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்கப்போவது தொடர்பில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கே.எம். வசந்த பண்டாரவை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கெதிரான பிரேரணையை கொண்டுவரவுள்ளது. இதற்கான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் அளிப்பதாக உறுதியளித்துள்ளது. இதுவொன்றும் புதுமையான விடயமல்ல. திட்டமிட்ட பிரசாரத்தை மேற்குலக நாடுகள் இலங்கைக்கெதிராக மேற்கொண்டு வருகின்றன.
 
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. இலங்கையில் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கு இடமளிக்கக்கூடாது.
 
இஸ்ரேலுக்கெதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் இஸ்ரேல் அரசாங்கம் நாட்டுக்குள் சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதியளிக்கவில்லை. இஸ்ரேலின் நிலைப்பாட்டையே இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கமும் கொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment