Friday, January 24, 2014

காவல்துறை ஆணைக்குழுவிற்கு கூடுதல் அதிகாரங்கள் தேவை: தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஆணையாளர் சேனக வெல்கம்பாய!

Friday, January 24, 2014
இலங்கை::காவல்துறை ஆணைக்குழுவிற்கு கூடுதல் அதிகாரங்கள் தேவைப்படுவதாக தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஆணையாளர் சேனக வெல்கம்பாய தெரிவித்துள்ளார். 18ம் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறையினால் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு காவல்துறை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற போதிலும், அதற்கான சட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

17;ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு 18ம் திருத்தச் சட்டத்தின் கீழ் காவல்துறை ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய சட்டங்களின் மூலம் காவல்துறை ஆணைக்குழுவிற்கு போதியளவு அதிகாரங்கள் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினரால் பொதுமகன் ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு நட்ட ஈடு வழங்க காவல்துறை ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நட்ட ஈடு வழங்குவதற்கு தற்போதைய சட்டத்தில் இடமில்லை எனவும், நட்ட ஈடு வழங்கப்படக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உத்தேச சட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடாத்தும் அதிகாரம் மட்டுமே காவல்துறை ஆணைக்குழுவிற்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment