Monday, December 2, 2013

கச்சத்தீவு இந்தியா- இலங்கையின் பொது வர்த்தக மையமாக மாறும்: சுதர்சன நாச்சியப்பன்!

Monday, December 02, 2013
தூத்துக்குடி::கச்சத்தீவு இந்தியா- இலங்கையின் பொது வர்த்தக மையமாக மாறும் வாய்புள்ளது, என மத்திய தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் வாசனை பொருள்கள் வாரியத்தின் தர ஆய்வு மையம் 8 கோடிரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து சுதர்சன நாச்சியப்பன் பேசியதாவது:
 
தூத்துக்குடி துறைமுகத்தில் பட்டாசு போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு 158 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஈரான் நாடு தனது டீசல் கிடங்குகளை இந்தியாவில் அமைக்க முன் வந்துள்ளது. ஜெர்மன் நாட்டின் இயந்திரங்கள் டூல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை தூத்துக்குடி. நாங்குநேரி பகுதியில் அமைக்க திட்ட மிட்டுள்ளது.
 
ஜப்பான் வல்லுனர்கள் ஆய்வு: ஜப்பான் நாட்டில் இருந்து 1,500 பேர் அடங்கிய வல்லுனர்கள் குழு இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில் ஒரு குழு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது. சிறந்த மையம்: சிவகங்கை பகுதியில் எட்டு கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருள் சுத்தம் செய்யும் மையம் மூலம் வத்தல், மஞ்சள் சுத்தம் செய்து அனுப்பப்படும். அந்த பொருட்களை தூத்துக்குடி தர ஆய்வு மையத்தில் தரம் உறுதிப்படுத்தப்படும். ஏற்றுமதியில் சிறந்த நகராக தூத்துக்குடி அறிவிக்கப்படும்.
 
பொது வர்த்தக மையம்: கச்சத்தீவு இந்தியா- இலங்கையின் பொது வர்த்தக மையமாக மாற்ற இலங்கையிடம் பேசப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ பேச்சு இல்லை என்றாலும், இலங்கை சம்மதம் தெரிவிக்கும் நிலையில் உள்ளது. தற்போது கச்சத்தீவு சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இந்த வழக்கு முடிந்த பின் இது குறித்து பேசப்படும், என அவர் பேசினார்.

No comments:

Post a Comment