Tuesday, November 19, 2013

இந்தியாவில் பிரிவினையை தூண்டுகிறார் இலங்கை தூதருக்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு!

Tuesday, November 19, 2013
மதுரை::இந்தியாவில் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்படும் இலங்கை தூதர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு விசாரணைக்கு உகந்ததா என்பதில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த லேனாகுமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
 
இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், இந்தியாவில் பிரிவினையை தூண்டும் வகையில் நடந்து வருகிறார். கடந்த மார்ச் மாதம், இந்தியாவில் வட மாநிலங்களின் முதல்வர்களுக்கு இவர் ஒரு இ&மெயில் அனுப்பியுள்ளார். அதில், ‘இலங்கையில் வாழும் 25 சதவீத தமிழர்கள் மீது மட்டும் இந்திய அரசு அக்கறை காட்டுகிறது. இலங்கையில் வாழும் 75 சதவீத சிங்களர்கள், இந்தியாவின் பூர்வகுடி மக்களே. இவர்கள் ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்து இலங்கையில் குடியேறியவர்கள்.

எனவே, சிங்களர்கள் மீதும் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.இந்திய மக்களை தென் இந்தியர், வட இந்தியர் என பிரித்து பார்க்கும் செயலை, இலங்கை தூதர் செய்துள்ளார். ஒரு நாட்டில் தூதராக இருப்பவர், அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். பணிபுரியும் நாட்டின் இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடாது என 1961ல் ஐநா சபையின் வியன்னா மாநாட்டில் சாசனம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராகவும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இலங்கை தூதர் நடந்து வருகிறார்.எனவே, இந்தியாவுக்கான இலங்கை தூதரை, இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பினோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு எதிராக கருத்துகளை வெளியிட இலங்கை தூதருக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் பணிபுரியும் வெளிநாடுகளின் தூதர்கள் எப்படி நடக்க வேண்டும் என, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு புதிய விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஜெய்சந்திரன், வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என விவாதம் நடந்தது. அதன் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment