Friday, November 15, 2013

காமன்வெல்த் அமைப்பிலிருந்து மாலத்தீவு நீக்கம்!!

Friday, November 15, 2013
இலங்கை::மாலத்தீவில், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாமல், தள்ளி போடப்பட்டு வருவதால், காமன்வெல்த் அமைப்பிலிருந்து அந்நாடு, நீக்கப்பட்டு உள்ளது.
மாலத்தீவில், மாமூன் அப்துல் கயூம், 30 ஆண்டுகளாக, அதிபராக இருந்தார். 2008ல் நடந்த தேர்தலில், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர், முகமது நஷீத் வெற்றி பெற்றார். ஆனால், நான்கு ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர், போலீஸ் புரட்சி காரணமாக, கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், பதவி விலகினார். துணை அதிபராக இருந்த முகமது வாகீத், அதிபர் ஆனார். சென்ற செப்டம்பர் மாதம், 7ம் தேதி, புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாஜி அதிபர் கயூமின் சகோதரரும், மாலத்தீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான, அப்துல்லா யாமீன் உள்ளிட்டோர், அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். ஓட்டுகள் எண்ணப்பட்டதில், முகமது நஷீத், முன்னிலையில் இருந்தார். இருப்பினும், 50 சதவீத ஓட்டுகளை பெறாததால், செப்டம்பர் மாதம், 28ம் தேதி, மறுதேர்தல் நடைபெற இருந்தது.

ஆனால், முதல் கட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக, வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், முதல் கட்ட தேர்தலை, ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த மாதம், 19ம் தேதி, மறுதேர்தலை, மாலத்தீவு தேர்தல் ஆணையம், அறிவித்தது. ஆனால், 19ம்தேதி, வாக்காளர் பட்டியலை, இரண்டு வேட்பாளர்கள், அங்கீகரிக்காததால், தேர்தலை நடத்த, போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இந்நிலையில், கடந்த, 9ம்தேதி, மறுதேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிந்ததும் ஓட்டு எண்ணப்பட்டது. முகமது நஷீத், 46.4 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிபர் பதவியை பெறுவதற்கு, 50 சதவீத ஓட்டுக்களை எந்த வேட்பாளரும் பெறாத காரணத்தால், வரும், 16ம்தேதி, மறுதேர்தல் நடத்த, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மாலத்தீவில், உரிய நேரத்தில், தேர்தல் நடத்தாததால், அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளது.

இதற்காக, அந்நாட்டை, காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்குவதாக, இந்த அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயற்குழு நேற்று அறிவித்தது. இதையடுத்து,, காமன்வெல்த் மாநாட்டில், மாலத்தீவு பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment