Friday, November 15, 2013

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஓர் இனவாதக் கட்சி அல்ல: விநாயகமூர்த்தி முரளிதரன்!

Friday, November 15, 2013
இலங்கை::ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஓர் இனவாதக் கட்சி அல்ல என அக்கட்சியின் பிரதித் தலைவரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையிலுள்ள எந்வொரு தேசிய கட்சியும் ஓர் இனத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு கல்குடா தொகுதி மத்திய செயற்குழு பிரதான காரியாலயத்தினை வந்தாறுமூலை பிரதேசத்தில் (11/13/2013)திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவிந்திரன், பிரத்தியேகச் செயலாளர் திருமதி.பேரின்பமலர் மோகனராஜா, மீள்குடியேற்ற அதிகார சபைப் பணிப்பாளர் க.சத்தியவரதன், தென்னை பயிர் செய்கை சபை பிராந்திய முகாமையாளர் வசந்தகுமார பமுனுகொத்கே மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது செங்கலடி பிரதேச எல்லைக்குட்பட்ட தமிழ் மற்றும் சிங்கள தச்சு மற்றும் மேசன் தொழிலாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகளும் வினியோகிக்கப்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இணைந்து கொண்ட நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இதன்போது கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்ந்து உரையாற்றுகையில்!

எமது பிரதேச மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்றதும் வித்தியசமாக கோணங்களில் பார்க்கிறார்கள்;. எமது மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இலங்கையிலுள்ள தேசிய கட்சிகள் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது ஸ்தாபகரில் ஒருவராக தர்மராஜா என்ற தமிழர் செயற்பட்டுள்ளார். எமது மாவட்டத்தில் படுவான்கரை நகர் பகுதியுடன் இணைக்கும் வவுணதீவு பாலத்தைக் கட்டிய ராஜன் செல்வநாயகம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர். யுத்தகாலத்தில் காலத்தில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக இக்கட்சியில் இணைந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டார்கள். தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் எவ்வித அச்சமும் இல்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அனைத்து மக்களையும் அணைத்துச் செல்லக் கூடிய ஒரு கட்சியாக காணப்படுகிறது. இந்த கட்சியில் மாத்திரம் தான் தமிழருக்கு ஒரு பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆளும் தேசிய கட்சியில் ஒரு பிரதித் தலைவர் பதவி பெறுவதென்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும். அப்படியிருந்தும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் நலன் கருதி எனக்கு பிரதித் தலைவர் பதியை வழங்கியிருக்கினார். இந்த பதவியினூடாக எமது இனத்துக்கு பல வழிகளிலும் சேவையாற்ற முடியும்

இந்த கட்சியை இனவாத கட்சி என்று கூறும் மனப்பாங்கை முதலில் மாற்றியமைக்க வேண்டும். இந்த கட்சியில் எமது மக்களுக்கும் உரிமையுண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.

இன்று எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன, மத, மொழி பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் சேவையாற்றி வருகின்றார். இந்த வாய்ப்புகளை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்தி சிறந்த முறையில் எமது பிரதேசங்களை அபவிருத்தி செய்ய வேண்டும்.

வந்தாறுமூலைப் பிரதேசத்தி உப்போடை வீதி புனரமைக்கப்பட வேண்டும், கிரான்புல் அணைக்கு ஒழுங்கான முறையில் நீர் வழங்க வேண்டும் என பல தேவைகள் உள்ளன. இவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்கு நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறான வாய்ப்புக்களை அதிகரித்துச் செல்வதற்காக இன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி மத்திய செயலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இன்று நான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகளுக்கான வளங்களை கொண்டு வரமுடிகிறது என்றார்.
 

 

No comments:

Post a Comment