Saturday, November 2, 2013

ஆன்மீக வணக்கங்கள் மூலம் சமூகத்தில் புரிந்துணர்வையும், சுபீட்சத்தையும் உருவாக்க வேண்டும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீபாவளி வாழ்த்து!

Saturday, November 02, 2013
இலங்கை::ஆன்மீக வணக்கங்கள் மூலம் சமூகத்தில் புரிந்துணர்வையும், சுபீட்சத்தையும் உருவாக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக தீபாவளி பண்டிகை அமைந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உலகளாவிய இந்துக்களால் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

வழிபாடுகள், ஆன்மீக வணக்கங்கள் மூலம் இலங்கை வாழ் இந்துக்கள், இந்த விசேட பண்டிகையை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுடன் இணைந்துகொள்கின்றனர் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உலகின் சட்டப் பெறுமானங்களால் நிறைந்த மனித நடைமுறைகளைக் கடந்து இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மீக பெறுமானங்களின் ஒரு கொண்டாட்டமாக இன்றைய தீபத்திருநாள் அமைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று தசாப்தகால போராட்டத்தின் பின்னர் புதிய நல்லிணக்க உணர்வில் வேற்றுமைகளைக் களைந்து சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை வளர்த்து, சுபீட்சத்தை அதிகரிப்பதற்கு தீபாவளி கொண்டாட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அன்புணர்வும், அர்ப்பணிப்பும் நிறைந்த இந்த தீபாவளி திருநாள் இந்து சமய போதனைகளை பின்பற்றும் எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியையும், சமதானத்தையும், புரிந்துணர்வையும் கொண்டுவர வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குரோதத்திற்கு பதிலாக அன்பு, கருணை என்பவற்றைப் பரப்புவதே இந்த தீபத்திருநாளின் நோக்கமாக அமைய வேண்டும் என பிரதமர் டி.எம். ஜயரத்ன தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நட்பு, நல்லிணக்கம் ஊடாக இந்துக்களுக்கு மகிழ்ச்சிமிக்க வாழ்க்கை கிட்டவேண்டும் என பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் மகிழ்ச்சி மிக்க தீபாவளி பண்டிகை வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment