Tuesday, November 26, 2013
சென்னை::மத்திய மந்திரி நாராயணசாமி விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கை புலன் விசாரணை நடத்திய அதிகாரிகளில் ஒருவர் 22 ஆண்டுகள் கழித்து தற்போது திடீரென முன்னுக்கு பின் முரணாக பேசியிருக்கிறார்.
தற்போது பேச வேண்டிய அவசியம் என்ன? என்று தெரியவில்லை. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை மறு விசாரணை நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் பதவியில் இருக்கும்போது ஒன்றும், ஓய்வு பெற்ற பின்னர் ஒன்றும் பேசுவது சரியானதல்ல. இந்திய-இலங்கை மீனவர்கள் இடையே டிசம்பரில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
மீனவர் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. முதல்-அமைச்சரின் கோரிக்கை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தப்படும் அந்த அமைச்சக அதிகாரிகள் இது சம்பந்தமாக தமிழக அரசுடன் கலந்து பேசி பேச்சுவார்த்தை நடத்தும் இடம், தேதி ஆகியவற்றை முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:
Post a Comment