Tuesday, November 26, 2013

மதுரையில் 1கோடி கேட்டு மாணவனை கடத்திய 2 டிரைவர்கள் கைது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்!!

Tuesday, November 26, 2013
திருச்சி::ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மதுரை மாணவனை, துப்பாக்கி சூடு நடத்தி திருச்சி அருகே போலீசார் மீட்டனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டிரைவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். இன்று காலை மற்றொரு கடத்தல்காரனை பொதுமக்களே மடக்கினர்.
மதுரை தபால் தந்தி ரோடு நட்சத்திரா நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். கட்டிட கான்ட்ராக்ட் மற்றும் காய்கறி குடோன் வைத்துள்ளார். இவரது மகன் கிரண் ரோகித் (14) 9ம் வகுப்பு படிக்கிறான். நேற்று மாலை பள்ளி வேனில் வீட்டருகே இறங்கி ரோகித் நடந்து சென்றான். அப்போது 3 பேர் முகவரி கேட்பது போல் ரோகித்தை மடக்கி காருக்குள் தூக்கி போட்டு கொண்டு வேகமாக பறந்தனர். காரில் செல்லும் போதே ரவிக்குமாரின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் வாங்கினர்.

உடனே ரவிக்குமாரை கடத்தல் கும்பல் போனில் தொடர்பு கொண்டு, உங்கள் மகனை கடத்தி உள்ளோம். ரூ.1 கோடி கொடுத்தால் விடுவிப்போம். பணத்தை புதுக்கோட்டை மாவட் டம், கீரனூருக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்தனர். பதற்றம் அடைந்த ரவிக்குமார் மதுரை போலீசாருக்கு தகவல் அளித்தார். செல்போன் டவரை வைத்து கண்காணித்ததில், கடத்தல்காரர்கள் திருச்சி திருவெறும்பூர் மற்றும் தஞ்சாவூர் பகுதியில் சுற்றுவது தெரிந்தது. உடனே திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் போலீசார் பொன்னமராவதி டிஎஸ்பி இளங்கோ, கீரனு£ர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி தலைமையில் கிள்ளுக்கோட்டை சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இரவு 8.30 மணி அளவில் அந்த வழியாக வந்த காரை மடக்கினர். ஆனால், கார் நின்றவுடன் அதில் இருந்த 3 பேர் தப்பியோடினர். டிரைவரை பிடிக்க முயன்ற போது, இன்ஸ்பெக்டர் வேலுசாமியை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் டிரைவரை இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் காலில் காயம் அடைந்த டிரைவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் காருக்குள் சோதனை செய்த போது, அதில் கிரண் ரோகித் இருந்தான். உடனே அவனை பத்திரமாக மீட்டனர். டிரைவரிடம் விசாரித்த போது, அவர் திருச்சி இபி ரோட்டை சேர்ந்த கணேசன்(32) என்பது தெரிய வந்தது. அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் இரவு போலீசார் விசாரிக்கவில்லை. இன்று காலை முதல் அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.  மீட்கப்பட்ட மாணவனை அவனது தந்தை ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி அமல்ராஜ் கூறுகையில், மாணவன் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், முக்கிய சாலைகள் போலீசாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. திருவெறும்பூர் வழியாக கிள்ளுக்கோட்டை சென்று கீரனூர் வழியாக கார் வருவது கண்டறியப்பட்டது. அந்த சாலையில் எல்லா வாகனங்களையும் தீவிர சோதனை செய்த போது மாணவனை கடத்தி சென்ற கார் சிக்கியது. காரில் வந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். கீரனூர் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமியை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால் டிரைவர் கணேசனை சுட்டு பிடித்தார் என்றார்.  
இதற்கிடையே தப்பி ஓடிய 3 பேர் காட்டு பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் துணையுடன் போலீசார் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், பள்ளத்துப்பட்டியை சேர்ந்த துரை என்பவர் இன்று காலை கரும்பு காட்டுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது சலசல என்று சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்தில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்த்தனர்.

விசாரணையில் மாணவனை கடத்திய கும்பலில் இவரும் ஒருவர் என்றும், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பதும் தெரிய வந்தது. மாணவன் ரோகித்தின் தாத்தா சுப்பராஜ் என்பவரிடம் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பிரபு டிரைவராக இருந்துள்ளார். ரவிக்குமார் வசதியாக இருப்பதால் அவருடைய மகனை கடத்தி ரூ.1 கோடி கேட்கலாம் என்று கூறி கடத்தல் திட்டத்துக்கு முக்கிய மூளையாக பிரபு இருந்துள்ளார். மேலும், ரோகித்தை ஏற்கனவே பிரபுவுக்கு தெரியும் என்பதால் கடத்தல் திட்டம் எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதன்படி கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இப்போது பிடிபட்ட பிரபுவிடமும் போலீசார் துருவி துருவி விசாரிக்கின்றனர். சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்ததால் மாணவன் மீட்கப்பட்டான்.டிரைவர் கணேசன் மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment