Tuesday, November 19, 2013

பிரிட்டிஷ் வெள்ளைக்கார ஆதிக்க அகம்பாவம் கொண்ட டேவிட் கமரூனின் தாளத்திற்குஆடுவதற்கு இலங்கை தயாரில்லை: சம்பிக்க ரணவக்க!

Tuesday, November 19, 2013
இலங்கை::பிரிட்டிஷ் வெள்ளைக்கார ஆதிக்க அகம்பாவம் கொண்ட டேவிட் கமரூனின் தாளத்திற்கு
ஆடுவதற்கு இலங்கை தயாரில்லை . இதனால் யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லையென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியின் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார் .
 
கமரூனுக்கு துணை போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் , ஐ.தே. கட்சிக்கும் எதிராக மக்களை வீதியில் இறக்குவோம் வெள்ளைக்காரனின் அகம்பாவம் அஸ்தமித்து விட்டது என்பதை உணர்த்துவோமென்றும் அமைச்சர் தெரிவித்தார் .
 
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார் .
 
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,
 
ஈராக் , ஆப்கானிஸ்தானில் இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து அந்நாடுகளை அழித்த பிரிட்டனின் பிரதமருக்கு இலங்கை தொடர்பாக குற்றம் சுமத்துவதற்கு அருகதை கிடையாது . எமது நாட்டில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூறுவதற்கு கமரூன் யார் ?
 
நாம் இன்னமும் ஆதிக்க வெறி கொண்ட வெள்ளைக்காரனின் அடிமை நாடல்ல . சுதந்திரம் இறையாண்மை கொண்ட நாடு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் . உலகில் இன்று மேற்கத்தைய வெள்ளைக்கார நாடுகளின் ஆதிக்க வெறி பொருளாதாரம் அழிந்து வருகிறது . ஆசிய , ஆபிரிக்க , லத்தின் அமெரிக்க நாடுகள் தலைதூக்கி வருகின்றன . பிரிட்டன் இன்று சீனாவின் உதவியுடனேயே தனது பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளது .
 
இன்று அரச ஆட்சியே பிரிட்டனில் காணப்படுகின்றது . ஜனநாயகம் அங்கு இல்லை . இவ்வாறான நாட்டின் பிரதமர் எமது நாட்டின் ஜனநாயகம் பற்றி பேசுவதா . 1815 ஆம் ஆண்டு கண்டி பிரகடனத்தின் போது இந்நாட்டின் ஆட்சியாளர்கள் சொந்தக்காரர்கள் சிங்களவர்களே என பிரிட்டிஷார் ஏற்றுக் கொண்டனர் .
 
அதன் பின்னர் 1835 ஆம் ஆண்டு அரசியல் சபைக்கு 1 சிங்களவரும் 1 தமிழரும் நியமிக்கப்பட வேண்டுமென்றனர் . வடக்கு - கிழக்கில் தமிழர்களை அதிகமாக குடியமரச் செய்து மிஷனரி கல்வியை ஏற்படுத்தி பிரபுத்துவ தமிழ் குழுமத்தை உருவாக்கினர் . இவ்வாறு இனவாத , பிரிவினைவாதத்தை இலங்கையில் விதைத்தவர்கள் கமரூனின் மூதாதையர்களே ஆவார்கள் .
 
கோப்பி , தேயிலை தொழிலுக்கு இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் தமிழர்கள் கொண்டு வரப்பட்டு திட்டமிட்டு வட கிழக்கில் குடியேற்றப்பட்டனர் . இதன் காரணமாகவே இன்றைய பிரச்சினை தோன்றியது என்பதை கமரூன் புரிந்து கொள்ள வேண்டும் . இலங்கைக்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இருக்குமானால் அதற்கான ஆதாரபூர்வமான சாட்சியங்களை வெளியிட வேண்டும் .
 
இன்று வடக்கில் விக்கினேஸ்வரன் தலைமையில் கூட்டமைப்பினர் இயங்குகின்றனர் . இது  புலிகளின் அரசியல் பிரிவாகும் . எதிர்காலத்தில் புலிகள் தலைதூக்கி அமிர்தலிங்கத்திற்கு நடந்த கதியே விக்கினேஸ்வரனுக்கும் ஏற்படும் .
 
இலங்கைக்குள்ளேயே வந்து அரசை எச்சரிக்கை செய்ய இந்த டேவிட் கமரூன் யார் ? இவரின் இந்த ஆட்டத்திற்குக் காரணம் புலம்பெயர் தமிழர்களே என எம்மால் உறுதியாகக் கூற முடியும் .
 
பிரிட்டனில் நடைபெறவிருக்கும் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் இவருக்குக் குறைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அரசு மீது சுமத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது .
 
இவருக்குத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கின்றதே ஒழிய தமிழர்களின் பிரச்சினையோ , மனித உரிமை மீறல்களோ கிடையாது . அத்துடன் இவரின் பேச்சையும் அரசு ஒருபோதும் அலட்டிக் கொள்ளாது . இவர் மட்டுமல்ல வேறெந்த சக்தியாலும் கூட இந்த அரசை அசைக்க முடியாது என்றார் .
 
கமரூனுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்படும் கூட்டமைப்பு , ஐ.தே. கட்சிக்கு எதிராக மக்கள் சக்தியை இணைத்து தோல்வியடையச் செய்வோம் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார் .

No comments:

Post a Comment