Thursday, November 21, 2013

வெளிநாட்டு அழுத்தங்களுக்காக வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது: வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Thursday, November 21, 2013
இலங்கை::வெளிநாட்டு அழுத்தங்களுக்காக வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதே எமது நிலைப்பாடு எனவும் அதில் மாற்றமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நாட்டுக்கு பல்வேறு வழிகளில் நன்மைகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இலங்கை தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வந்த பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு இந்த அமர்வுகள் வழியமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையிலும் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை நேரில் பார்வையிட வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பி;ட்டுள்ளார். வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியிலும் பாரியளவில் நன்மைகள் கிடைக்கும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையானவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகள் மட்டுமே புலம்பெயர் தமிழர்களுக்கு தேவையான வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உள்ளி;ட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற பல நாடுகளில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதற்கு பாரிய கால அவகாசம் தேவைப்பட்ட போதிலும், இலங்கை விவகாரத்தில் சில நாடுகள் துரித கதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment